Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து ‘தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முன்னுரிமை’, ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’ உள்ளிட்டவற்றை வலியுறுத்தி தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில் இன்று தமிழக சட்டப்பேரவை கூடியதுமே, தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதல்வர் விஜய் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார்.
தற்போதுள்ள மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைக்க வேண்டும், பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை காலதாமதமின்றி, தற்போதுள்ள 543 தொகுதிகளின் அடிப்படையிலேயே 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று ஒன்றிய அரசை வலியுறுத்துவதாக முதல்வர் விஜய் கூறினார்.
அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்மொழிந்த அரசினர் தனித்தீர்மானத்தின் மீது கட்சி வாரியாக உறுப்பினர்கள் பேசி, தங்களுடைய கருத்துகளை தெரிவித்தனர்.
தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன.
பா.ஜ.க., அ.தி.மு.க., பா.ம.க. ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. தீர்மானத்தின் சில அம்சங்களை தே.மு.தி.க. எதிர்த்தது.
இதில், பா.ஜ.க, அ.தி.மு.க., தே.மு.தி.க. ஆகியவை பெண்களுக்கான இடஒதுக்கீடு தீர்மானத்தை மட்டும் ஆதரித்தன.
அதன்பின்னர், தீர்மானம் குரல் வாக்கெடுப்பிற்கு விடப்பட்டது. தொடர்ந்து அரசினர் தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
Hindusthan Samachar / vidya.b