நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் அலட்சியம் – ஸ்டான்லி மருத்துவமனை ஊழியரின் வீடியோ வைரல்
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் ஊழியர் ஒருவர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பல்நோக்கு சிகிச்சை
ஸ்டான்லி


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் ஊழியர் ஒருவர் அலட்சியமாக செயல்பட்டதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்நோக்கு சிகிச்சை வசதிகள் கொண்ட ஸ்டான்லி மருத்துவமனைக்கு தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படும் நோயாளிகளுக்கு மருத்துவமனை நிர்வாகம் சார்பில் பால், காபி, முட்டை உள்ளிட்ட உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வார்டில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு முட்டை வழங்கும் பணியில் இருந்த ஊழியர் ஒருவர், நோயாளிகளின் கைகளில் நேரடியாக வழங்காமல், அவர்களின் படுக்கை மற்றும் கால்களுக்கு அருகில் அலட்சியமாக வைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

மேலும், சில நோயாளிகளுக்கு முட்டையை வீசுவது போன்றும் அந்த ஊழியர் நடந்து கொண்டதாக வீடியோவில் பதிவாகியுள்ளது.

இதனை அங்கிருந்த ஒருவர் செல்போனில் பதிவு செய்த நிலையில், தற்போது அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவை ஊழியர்கள் முறையாகவும், உரிய மரியாதையுடனும் வழங்க வேண்டும் என்ற நிலையில், இந்த சம்பவம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பந்தப்பட்ட ஊழியர் மீது மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam