Enter your Email Address to subscribe to our newsletters

கோவை , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மண்டல அளவிலான பள்ளிகளுக்கிடையேயான தடகள போட்டிகள் கோவை நேரு ஸ்டேடிய வளாகத்தில் நடைபெற்றது.
கோவை ஸ்டேன்ஸ் பள்ளி சார்பில் நடைபெற்ற இந்த மண்டல அளவிலான போட்டியில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று தங்களது விளையாட்டுத் திறமைகளை வெளிப்படுத்தினர்.
இதில் செயின்ட் ஜூட்ஸ் பள்ளி மாணவர்கள் பல்வேறு விளையாட்டுகளில் சிறப்பாக செயல்பட்டு 19 தங்கப் பதக்கங்கள், 29 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 50 பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.
இதன் மூலம் 184 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தை பிடித்த செயின்ட் ஜூட்ஸ் பள்ளி, மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.
இரண்டாவது இடத்தை 57 புள்ளிகளுடன் செயின்ட் மைக்கேல்ஸ் அகாடமியும், 48 புள்ளிகளுடன் போட்டியை நடத்திய ஸ்டேன்ஸ் பள்ளி மூன்றாவது இடத்தையும், 37 புள்ளிகளுடன் செயின்ட் ஹில்டாஸ் பள்ளி நான்காவது இடத்தையும் பிடித்தன.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஸ்டேன்ஸ் பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபவுலர் பரிசுகள் மற்றும் பாராட்டுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் செயின்ட் ஜூட்ஸ் பப்ளிக் பள்ளி மற்றும் இளையோர் கல்லூரி முதல்வர் சரோ தன்ராஜன், ஸ்டேன்ஸ் பள்ளி முதல்வர் செனட் ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மாணவர்களின் விளையாட்டுத் திறமை, கடின உழைப்பு மற்றும் தொடர் பயிற்சியின் வெளிப்பாடாக இந்த வெற்றி அமைந்துள்ளதாக பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
மண்டல அளவிலான போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றுள்ள இந்த வெற்றி, மாணவர்கள் தொடர்ந்து தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்று மேலும் பல சாதனைகளை படைக்க ஊக்கமளிக்கும் என செயிண்ட் ஜூட்ஸ் பள்ளி முதல்வர் சரோ தன்ராஜ் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA