இறுதியான சட்ட வடிவம் பெறாத ஒரு விஷயத்தை வைத்து அச்சத்தை உருவாக்க வேண்டாம் - தமிழிசை சௌந்தரராஜன்
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான தீர்மானம் தேவையற்றதும், முன்கூட்டியதுமானது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், இத
_


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தொகுதி மறுவரையறை (Delimitation) தொடர்பான தீர்மானம் தேவையற்றதும், முன்கூட்டியதுமானது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதில்,

இதுவரை முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை தொடர்பாக எந்தவொரு சட்ட வடிவமைப்போ அல்லது சட்ட மசோதா வரைவோ முன்வைக்கப்படவில்லை. எனவே, அனுமானங்களின் அடிப்படையில் தீர்மானம் நிறைவேற்றி, மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவது தேவையற்றது.

நமது மாண்புமிகு பிரதமர் திரு. @narendramodi ji அவர்கள், தென் மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்று பலமுறை உறுதியளித்துள்ளார். மேலும், நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தை விரிவுபடுத்துவதோடு, பெண்களின் அதிக பங்கேற்பையும் உறுதி செய்வது குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு தொலைநோக்குப் பார்வையும், நியாயமான பிரதிநிதித்துவமும், எதிர்காலத்திற்கான தெளிவான சிந்தனையும் தேவைப்படும் இத்தருணத்தில், சட்டப்பேரவையில் முதிர்ச்சியுடனும், தேசியப் பொறுப்புணர்வுடனும் நிலைப்பாட்டை எடுத்துள்ள நமது பாஜக சட்டமன்ற உறுப்பினரை நான் பாராட்டுகிறேன்.

இன்னும் இறுதியான சட்ட வடிவம் பெறாத ஒரு விஷயத்தை வைத்து அச்சத்தை உருவாக்க வேண்டாம். அரசியலமைப்புச் சட்ட நடைமுறையை நம்புவோம்.

மாண்புமிகு பிரதமரின் உறுதிமொழிகளை நம்புவோம். அரசியல் கணக்கீடுகளுக்கு மேலாக தேசிய நலனை முன்னிறுத்துவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Hindusthan Samachar / ANANDHAN