முதல்வர் ரேவந்த் ரெட்டி ‘அனுமுலா ஹப்ஸ்’ உருவாக்குகிறார் -ரூ.200 கோடி மதிப்புள்ள அரசு நிலம் ரூ.7 கோடிக்கு ஒதுக்கப்பட்டதாக பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் கேடிஆர் பரபரப்பு குற்றச்சாட்டு
ஐதராபாத் , 12 ஆகஸ்ட் (ஹி.ச.) தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது சகோதரர் அனுமுலா கொண்டல் ரெட்டி மீது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் (கே.டி.ஆர்.) அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். டெஸ்ஸராக்ட் அ
A


ஐதராபாத் , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

தெலுங்கானா முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி மற்றும் அவரது சகோதரர் அனுமுலா கொண்டல் ரெட்டி மீது பி.ஆர்.எஸ். கட்சியின் செயல் தலைவர் கே.டி. ராமாராவ் (கே.டி.ஆர்.) அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

டெஸ்ஸராக்ட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துக்கு அரசு நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் சுமார் ரூ.200 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில் கே.டி.ஆர். வெளியிட்டுள்ள பதிவில்,

நாங்கள் உண்மையான ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக டி-ஹப் அமைத்தோம். ஆனால் ரேவந்த் ரெட்டி குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து ‘அனுமுலா ஹப்ஸ்’ உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறார்” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், வெறும் ரூ.1 லட்சம் செலுத்தப்பட்ட மூலதனத்தையும், ஊழியர்கள் இல்லாத நிலையையும் கொண்ட ஒரு நிறுவனத்துக்கு விலைமதிப்பற்ற அரசு நிலம் எப்படி ஒதுக்கப்பட்டது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

சுமார் ரூ.200 கோடி மதிப்புள்ள 5 ஏக்கர் நிலம் வெறும் ரூ.7 கோடிக்கு ஒதுக்கப்பட்டதாகவும், ஒரு சதுர கஜத்துக்கு சுமார் ரூ.3,700 என்ற விலையில் இந்த ஒதுக்கீடு நடைபெற்றதாகவும் கே.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

இந்த நிறுவனத்துக்கும் முதல்-மந்திரியின் சகோதரர் அனுமுலா கொண்டல் ரெட்டிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அமைச்சர் ஸ்ரீதர் பாபு கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள கே.டி.ஆர்., கொண்டல் ரெட்டியின் LinkedIn சுயவிவரத்திலும், அமெரிக்கா-இந்தியா ஸ்ட்ராட்டஜிக் பார்ட்னர்ஷிப் போரம் தொடர்பான தகவல்களிலும் அவர் டெஸ்ஸராக்ட் நிறுவனத்தின் தலைவராக குறிப்பிடப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நில ஒதுக்கீடு தொடர்பான அரசாணை, நிலத்தின் மதிப்பு, நிறுவனத்தின் தகுதி, முதலீட்டு திட்டம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தெலுங்கானா அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் கே.டி.ஆர். வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரிடம் புகார் அளிக்க இருப்பதாகவும், தேவைப்பட்டால் லோக் ஆயுக்தா மற்றும் நீதிமன்றத்தை நாடுவதாகவும் கே.டி.ஆர். தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA