Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடல், அமாவாசையை முன்னிட்டு சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டதால் பக்தர்கள் ஆச்சரியமடைந்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையை ஒட்டி அமைந்துள்ளது. கோவில் அருகே உள்ள கடல் நீர் புனித தீர்த்தமாக கருதப்படுவதால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னர் சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் கோவில் கடல் பகுதியில் கடல் நீர் சில மணி நேரம் உள்வாங்கி, பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில், இன்று அமாவாசை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் கடல் சுமார் 100 அடி தூரம் உள்வாங்கி காணப்பட்டது. இதனால் கடலுக்குள் இருந்த பச்சை நிற பாசி படிந்த பாறைகள் வெளிப்படையாக தெரிந்தன.
கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள், கடல் உள்வாங்கியதை ஆர்வத்துடன் பார்த்தனர். சிலர் பாறைகள் மீது ஏறி நின்று செல்பி மற்றும் புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
கடல் உள்வாங்கிய காட்சியை காண ஏராளமான பக்தர்கள் கடற்கரை பகுதியில் திரண்டதால், திருச்செந்தூரில் பரபரப்பான சூழல் நிலவியது.
Hindusthan Samachar / GOKILA arumugam