கிரிவலப் பாதையில் சாலையோர கடைகள் அதிரடியாக அகற்றம் - வியாபாரிகள் வேதனை
திருவண்ணாமலை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந
Street Shops


திருவண்ணாமலை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளி நாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபடுவதும், கிரிவலப் பாதையில் உள்ள ஆசிரமங்கள் மற்றும் சிறப்பு வாய்ந்த கோவில்கள் சென்று வழிபடுவதும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

மேலும் மாத மாதம் வரும் பௌர்ணமி, வார விடுமுறை நாட்கள் உள்ளிட்ட வார நாட்களிலும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பகல் நேரங்களிலும், குறிப்பாக இரவு நேரங்களில் அதிகப்படியான பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்டு அண்ணாமலையாரை வழிபாடு செய்து வருகின்றனர்.

அதன்படி வரும் பக்தர்களுக்கு இடையூறாக 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதை முழுக்க சாலையோர வியாபாரிகள், நடைபாதையை ஆக்கிரமித்து கடைகளை வைத்துள்ளனர்.

எனவே பக்தர்களுக்கு இடையூறாக உள்ள நடைபாதை கடைகளை உடனடியாக அகற்ற வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது இடையூறாக உள்ள நடைபாதை ஆக்கிரமிப்புகளை கண்காணிக்கவும், அகற்றவும் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்று திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள அண்ணா நுழைவு வாயில், அடிஅண்ணாமலை, செங்கம் சாலை, ரமணர் ஆசிரமம், சின்னக்கடை வீதி, காஞ்சி சாலை உள்ளிட்ட 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப் பாதை முழுக்க சாலையோரம் உள்ள கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அகற்றி வருகின்றனர்.

அப்போது சாலை ஓரம் இருபுறங்களில் வைக்கப்பட்டிருந்த தகரத்தினாலான தற்காலிக கடைகளை நெடுஞ்சாலைத்துறையினர், கோயில் ஊழியர்கள் மற்றும் காவல் துறையினர் உள்ளிட்டோர் பல்வேறு குழுக்களாக பிரிந்து, அனைத்து இடங்களிலும் ஜேசிபி எந்திரத்தின் உதவியுடன் கடைகளை தற்போது அகற்றி வருகின்றனர்.

கடைகளை அகற்றி பறிமுதல் செய்து டிராக்டர் மூலமாக மாநகராட்சி அலுவலகத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவண்ணாமலை மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன கடைவீதி, செங்கம் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலையோர வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பேசிய சாலை ஓர வியாபாரிகள்,

மாநகராட்சி நிர்வாகத்திடம் முறையாக பணம் செலுத்தி சாலையோர வியாபாரிகள் என சான்று பெற்று சாலையோரத்தில் வியாபாரம் செய்து வருவதாகவும், தினந்தோறும் மாநகராட்சிக்கு வாடகை செலுத்தி ரசீது பெற்று வருவதாகவும், ஆனால் மாநகராட்சி நிர்வாகம் தற்பொழுது வியாபாரம் செய்து கொண்டிருக்கும் பொழுது எந்தவித முன் அறிவிப்பும் அறிவிக்காமல் கடைகளை காலி செய்வது என்பது தங்களுக்கு மிகுந்த வேதனை அளிப்பதாகவும், இந்த கடையை நம்பி வட்டிக்கு பணம் வாங்கி தொழில் செய்து வருவதாகவும், தங்களால் தினந்தோறும் கடையை திறந்தால் தான் குடும்பத்தை நடத்த முடியும் என்ற சூழலில் மாநகராட்சி நிர்வாகம் சாலையோர வியாபாரிகளை மீண்டும் கடை வைக்க அனுமதிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டனர்.

திருவண்ணாமலை ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் இருக்கும் வரை 30 ஆண்டுகளுக்கு மேலாக இதே சாலையோரத்தில் வியாபாரம் செய்து வந்ததாகவும், ஆனால் தற்பொழுது புதிய பேருந்து நிலையம் மாற்றப்பட்ட நிலையில் தங்களுக்கு வியாபாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டதாக வேதனையுடன் கூறும் அவர்கள், ஆனால் அதனையும் சமாளித்துக் கொண்டு கிடைக்கும் வியாபாரத்தை வைத்து குடும்பம் நடத்தி வருவதாகவும், ஆனால் 3 மாதத்திற்கு ஒரு முறை இதே பிரச்சனை தங்களுக்கு வருவதாக வேதனையுடன் கூறும் சாலையோர வியாபாரிகள் தமிழக அரசு மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு வியாபாரிகளை காக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN