Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
விஐபிக்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகள் வருகையின்போது மேற்கொள்ளப்படும் தங்குமிடம், உணவு, போக்குவரத்து உள்ளிட்ட நெறிமுறை ஏற்பாடுகளுக்காக தமிழக அரசு ரூ.6.85 கோடி கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை பிறப்பித்துள்ளது.
தற்போதைய நடைமுறையின்படி, மாவட்ட ஆட்சியர்கள் வருகை தரும் முக்கிய பிரமுகர்களுக்கான தங்குமிடம், உணவு மற்றும் போக்குவரத்து செலவுகளுக்காக ஒவ்வொரு பிரிவுக்கும் ரூ.25 ஆயிரம் வரையிலும், 3 பிரிவுகளுக்கும் சேர்த்து அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வரையிலும் செலவிட அனுமதி இருந்தது.
இந்நிலையில், சமீப ஆண்டுகளில் விஐபிக்கள், குழுக்கள், மூத்த அரசு அதிகாரிகள், அரசியலமைப்பு அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு பிரதிநிதிகளின் வருகை அதிகரித்துள்ளதால், ஏற்கனவே உள்ள நிதி வரம்புகள் போதுமானதாக இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையடுத்து, முதலமைச்சர் மற்றும் தமிழக அமைச்சர்களின் வருகைகள் தவிர, குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய மற்றும் மாநில அரசுகளின் மூத்த அதிகாரிகள், அரசியலமைப்பு அமைப்புகளின் தலைவர்கள், சர்வதேச பிரதிநிதிகள் உள்ளிட்டோரின் வருகைக்கான நெறிமுறை ஏற்பாடுகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியான நிதி ஒதுக்கீடு:
A பிரிவு – 8 மாவட்டங்கள்:
கோவை, கன்னியாகுமரி, மதுரை, ராமநாதபுரம், நீலகிரி, திருச்சி, திண்டுக்கல், திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களுக்கு தலா ரூ.25 லட்சம் என ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
B பிரிவு – 7 மாவட்டங்கள்:
திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு, சேலம், காஞ்சிபுரம், தஞ்சாவூர், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் என ரூ.1.40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
C பிரிவு – 23 மாவட்டங்கள்:
அரியலூர், செங்கல்பட்டு, சென்னை, கடலூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, சிவகங்கை, தேனி, தூத்துக்குடி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய 23 மாவட்டங்களுக்கு தலா ரூ.15 லட்சம் என ரூ.3.45 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 2026-27 நிதியாண்டில் மொத்தம் ரூ.6 கோடியே 85 லட்சம் கூடுதல் நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை மாவட்ட ஆட்சியர்கள் தேவைக்கேற்ப வருவாய் கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களுக்கு பகிர்ந்தளித்து, உண்மையில் ஏற்படும் செலவுகளின் அடிப்படையில் பயன்படுத்தலாம் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ