Enter your Email Address to subscribe to our newsletters

முர்ஷிதாபாத் , 12 ஆகஸ்ட் (ஹி.ச.)
மேற்கு வங்காள மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்கா பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் இக்பால், உடலில் ஏற்படும் கடுமையான எரிச்சல் காரணமாக பெரும்பாலான நேரத்தை குளத்து தண்ணீரிலேயே கழித்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இக்பால் உடல் பருமனாக இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் தண்ணீரை விட்டு வெளியே வந்ததும் உடல் முழுவதும் தாங்க முடியாத எரிச்சல் ஏற்படுவதாகவும், மீண்டும் தண்ணீருக்குள் சென்றால் அந்த எரிச்சல் குறைவதாகவும் தெரிவித்துள்ளார். இதனால் காலையிலிருந்து இரவு வரை குளத்திலேயே இருக்கும் அவர், சில நேரங்களில் ஒரு குளத்தில் இருந்து மற்றொரு குளத்துக்கும் செல்வதாக கூறப்படுகிறது.
குடும்பத்தினர் பலமுறை அழைத்தும் தண்ணீரை விட்டு வெளியே வர இக்பால் மறுப்பதாகவும், குளத்திலேயே உணவு சாப்பிடுவதற்காக அப்பகுதி மக்கள் உணவு கொண்டு வந்து கொடுப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்பாலின் பெற்றோர் ஏற்கனவே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க முயன்றுள்ளனர்.
எனினும், உடலில் ஏற்படும் எரிச்சலுக்கான சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து சிகிச்சை பெறுவதற்கான செலவையும் குடும்பத்தினரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீண்ட நேரம் தண்ணீரில் இருப்பதால் இக்பாலின் கை, கால்களில் உள்ள தோல் வெளிறி காணப்படுவதாகவும், சளி, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தண்ணீரில் இருப்பதால் தோல் மென்மையாகி, அதன் இயற்கையான பாதுகாப்பு தன்மை பாதிக்கப்படுவதுடன், பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதாக டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.
இக்பால் கூறும் உடல் எரிச்சலுக்கான காரணத்தை மருத்துவ பரிசோதனை மூலமே உறுதி செய்ய முடியும் என்றும், இதுபோன்ற அறிகுறிகளுக்கு அரிதான தோல் பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கலாம் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சில மருத்துவ வல்லுநர்கள் உளவியல் மதிப்பீடும் தேவையாக இருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், சிறுவனின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைவதை கருத்தில் கொண்டு, மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இக்பாலுக்கு உரிய மருத்துவ பரிசோதனைகளையும், தேவையான சிகிச்சையையும் இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவரது பெற்றோரும், அப்பகுதி பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA