தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு - மாணிக்கம் தாகூர் எம்.பி. அறிக்கை
சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.) மக்களவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்ந
Manickam


Bb


சென்னை, 12 ஆகஸ்ட் (ஹி.ச.)

மக்களவை உறுப்பினர்களின் தற்போதைய எண்ணிக்கையான 543 என்ற அளவிலேயே நிரந்தரமாக வைத்திருக்க வேண்டும். இதன் அடிப்படையிலேயே பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் கொண்டு வந்துள்ள அரசின் தனித் தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி சார்பில் வரவேற்று ஆதரிப்பதாக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஏப்ரலில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் தோற்கடிக்கப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதாவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மீண்டும் கொண்டுவர ஒன்றிய பாஜக அரசு திட்டமிட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா சட்டமானால், மாநிலங்களுக்கு இடையிலான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் பல மடங்கு அதிகரிக்கும் எனவும், இதனால் மாநிலங்களுக்கிடையிலான சமநிலை சீர்குலையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1971ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளே நீடிக்க வேண்டும் என்பதற்காக, அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி 1976ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத் திருத்தம் கொண்டு வந்ததாகவும், பின்னர் 2001ஆம் ஆண்டு பிரதமராக இருந்த ஏ.பி. வாஜ்பாய் இந்த நிலையை மேலும் 25 ஆண்டுகளுக்கு, அதாவது 2026 வரை நீட்டித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க ஒன்றிய அரசு முயற்சிப்பதாகவும், அவ்வாறு நடைமுறைப்படுத்தப்பட்டால் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு தண்டனையும், மக்கள் தொகையைக் குறைக்காத வட மாநிலங்களுக்கு பரிசும் வழங்கப்படுவது போன்ற நிலை உருவாகும் என்றும் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும், உத்தரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு இடையிலான மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை வித்தியாசம் 41-ல் இருந்து 62 ஆக அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 815 ஆக அதிகரித்தால், பெரும்பாலான எம்.பி.க்களுக்கு நாடாளுமன்றத்தில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்காது என்றும், தனிப்பட்ட எம்.பி.யின் முக்கியத்துவம் குறைந்து ‘ஒரு எம்.பி., ஒரு வாக்கு’ என்ற அடிப்படையே அர்த்தமற்றதாகிவிடும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொகுதி மறுவரையறை மசோதா தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தைப் பறிக்கும் என்றும், மாநில சுயாட்சி, ஜனநாயகம், சமூக நீதி, சமத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட இந்திய அரசியலமைப்பின் உயரிய நோக்கங்களை பாதிக்கும் என்றும் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

“தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்தக் கட்சியாவது தொகுதி மறுவரையறை மசோதா நிறைவேற நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவினால், அது தமிழ்நாட்டிற்கு இழைக்கும் அநீதி, துரோகம். அப்படிப்பட்ட கட்சிகளை தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் மன்னிக்க மாட்டார்கள்” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

தமிழ்நாட்டின் உரிமைகளையும், இந்திய அரசியலமைப்பையும் அடகுவைத்து ஒன்றிய பாஜக அரசுக்கு உதவும் எவரும் வரலாற்றுப் பிழையிலிருந்து தப்ப முடியாது என்றும், “தமிழ்நாட்டின் குரலாய், மக்களாட்சியின் காவலனாய் நாம் இறுதிவரை களத்தில் நிற்போம்” என்றும் ப. மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ