Enter your Email Address to subscribe to our newsletters

ராமேஸ்வரம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
பன்னிரண்டு ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான புனித ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் ஆடித் திருவிழா பக்தர்களின் பேரெழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான 9-ம் திருநாள் தேரோட்டம் இன்று பக்தி பரவசத்துடன் மிக கோலாகலமாக நடைபெற்றது.
இதனையொட்டி அதிகாலை முதலே அம்பாள் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. மலர் அலங்காரத்தில் ஜொலித்த பர்வதவர்த்தினி அம்பாள், அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார்.
வேத மந்திரங்கள் முழங்க, மேளதாளம் இசைக்க, பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை முட்டியது.
தொடர்ந்து திரளான பக்தர்கள் ஒன்று கூடி தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். அம்பாள் எழுந்தருளிய திருத்தேர், கோயிலின் நான்கு ரத வீதிகளிலும் மெல்ல உலா வந்தது. வீதிகளின் இருபுறமும் நின்றிருந்த ஏராளமான பக்தர்கள் அம்பாளை கண்குளிர தரிசித்து வழிபாடு செய்தனர்.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்மன் மாலை மாற்றும் தபசுத் திருவிழா நடைபெறவுள்ளது. ஆகஸ்ட் 16 ஆம் தேதி பர்வதவர்த்தினி அம்பாள் - ராமநாதசுவாமி ஆன்மீக இணைப்பைக் குறிக்கும் உலகப் புகழ்பெற்ற ஆடித் திருக்கல்யாண வைபவம் நடைபெறவுள்ளது.
கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் சுவாமி வீதி உலாவுடன் ஆடித் திருவிழா நிறைவடைகிறது.
Hindusthan Samachar / vidya.b