உலகின் முதல் 5 தலைநகரங்களில் ஒன்றாக உருவாக்கப்படும் - முதல்வர் சந்திரபாபு நாயுடு
அமராவதி , 13 ஆகஸ்ட் (ஹி.ச.) அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கியமான சீட் ஆக்சஸ் சாலையை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர். விழ
A


அமராவதி , 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

அமராவதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முக்கியமான சீட் ஆக்சஸ் சாலையை சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.

இதில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உயர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் அமராவதியை உலகின் முதல் 5 சிறந்த தலைநகரங்களில் ஒன்றாக உருவாக்குவோம்.

3 தலைநகர் திட்டம்

முந்தைய அரசு 3 தலைநகரங்கள் என்ற பெயரில் ஆந்திரப் பிரதேசத்தை 3 துண்டுகளாக பிரித்தது. இதனால் அமராவதி மட்டுமின்றி ஒட்டுமொத்த மாநிலத்தின் எதிர்காலமும் பாதிக்கப்பட்டது.

அப்போது சட்டசபையில் அமராவதிக்கு 30 ஆயிரம் ஏக்கர் போதாது என்றும், 40 முதல் 50 ஆயிரம் ஏக்கர் தேவை என்றும் கூறியவர்கள், ஆட்சிக்கு வந்த பிறகு தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டனர்.

அமராவதியை அழிக்க அரசியல் காரணங்களுக்காக முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

அமராவதி நகருக்காக உருவாக்கப்பட்ட பிரமாண்ட திட்டங்களை ‘கிராபிக்ஸ்’ என்று விமர்சித்தனர்.

ஆனால் இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சாலை, அமராவதி வெறும் கிராபிக்ஸ் அல்ல என்பதை நிரூபிக்கிறது.

வருங்காலத்தில் கிராபிக்ஸ் என்று கூறியவர்களே தலைகுனியும் அளவுக்கு அமராவதி உருவாக்கப்படும்.

விவசாயிகளுக்கு பாராட்டு

அமராவதிக்காக நிலங்களை வழங்கிய விவசாயிகளின் தியாகத்தை ஒருபோதும் மறக்க முடியாது.

அவர்களின் போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். விவசாயிகள் சந்தித்த கஷ்டங்களை நான் நேரில் பார்த்திருக்கிறேன்.

அமராவதி வளர்ச்சிக்காக விவசாயிகள் செய்த தியாகத்தின் அடிப்படையிலேயே இந்த தலைநகர் மீண்டும் கட்டமைக்கப்படுகிறது.

அவர்களுக்கு எனது தலைவணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

5 முக்கிய கொள்கைகள்

அமராவதியை உலகத் தரம் வாய்ந்த நகரமாக உருவாக்குவதற்கு 5 முக்கிய கொள்கைகள் பின்பற்றப்படும்.

சாலைகளில் மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகள் இல்லாத வகையில் மின்சார வசதிகள் பூமிக்கடியில் அமைக்கப்படும்.

நீர்வளங்களை சிறப்பாக பயன்படுத்தி ‘புளூ சிட்டி’யாக உருவாக்கப்படும்.

50 சதவீதத்துக்கும் அதிகமான பசுமைப் பகுதிகளுடன் ‘கிரீன் சிட்டி’யாக மாற்றப்படும்.

சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை பயன்படுத்தி ‘நெட் ஜீரோ கார்பன்’ நகரமாக உருவாக்கப்படும்.

டீப் டெக்னாலஜி, குவாண்டம் கம்ப்யூட்டிங் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் மூலம் அறிவுசார் பொருளாதாரத்தின் மையமாக அமராவதி உருவாக்கப்படும்.

இந்த திட்டங்களின் மூலம் அமராவதியை இந்தியாவின் மட்டுமின்றி, உலகின் முதல் 5 சிறந்த தலைநகரங்களில் ஒன்றாக உருவாக்குவதே இலக்கு.

பிரதமர் நரேந்திர மோடி, துணை முதல்-மந்திரி பவன் கல்யாண் ஆகியோரின் ஒத்துழைப்புடன் இந்த இலக்கை அடைவோம்.

ஒவ்வொருவரும் நாட்டுக்காக பங்களிக்க வேண்டும்

2047-ம் ஆண்டுக்குள் இந்தியாவை ‘விக்சித் பாரத்’ ஆகவும், ஆந்திரப் பிரதேசத்தை ‘ஸ்வர்ண ஆந்திரப் பிரதேசம்’ ஆகவும் மாற்ற வேண்டும். இதற்காக ஒவ்வொரு குடிமகனும் தங்கள் குடும்பம், மாநிலம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்காக ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்.

விவசாயி சிறப்பாக விவசாயம் செய்வதும், மாணவர் நன்றாகப் படிப்பதும், ஒவ்வொருவரும் தங்கள் தொழிலில் சிறந்து விளங்குவதும் நாட்டுக்கு செய்யும் சேவையே ஆகும்.

வருகிற சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.

திரங்கா பேரணிகளில் பொதுமக்கள் கலந்து கொண்டு நாட்டுப்பற்றை வெளிப்படுத்த வேண்டும்.

அமராவதியில் இன்று தொடங்கப்பட்டுள்ள இந்த சாலை வளர்ச்சிப் பயணத்தின் முதல் அடி மட்டுமே. இனி ஒவ்வொரு நாளும் அமராவதி கட்டமைப்புப் பணிகள் வேகமாக நடைபெறும்.

5 கோடி ஆந்திர மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் நகரமாக அமராவதி உருவாகும்.

இவ்வாறு சந்திரபாபு நாயுடு கூறினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA