அங்கன்வாடியில் 4 வயது சிறுமிக்கு தீக்காயம் – ஆசிரியை, பணியாளர் மீது புகார்
காஞ்சிபுரம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வரதராஜபுரம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ்–பிரீத்தா தம்பதியினரின் 4 வயது மகள் அனன்யா. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரதராஜபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில்
அங்கன்வாடி


காஞ்சிபுரம், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர்

வரதராஜபுரம் தனலட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்துராஜ்–பிரீத்தா தம்பதியினரின் 4 வயது மகள் அனன்யா. இரண்டு மாதங்களுக்கு முன்பு வரதராஜபுரம் பகுதியில் உள்ள அங்கன்வாடி மையத்தில் சிறுமி சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாக சிறுமியின் உடலில் ஆங்காங்கே சிராய்ப்பு காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 12-ம் தேதி அங்கன்வாடி மையத்திற்கு சென்று வீட்டிற்கு திரும்பிய சிறுமியின் காலில் தீக்காயம் இருப்பதை கண்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து அங்கன்வாடி ஆசிரியை பாரதி மற்றும் பணியாளர் கனிமொழியிடம் பெற்றோர் கேட்டபோது, சிறுமியிடம் தீக்காயம் குறித்து விசாரித்ததாகவும், அப்போது சிறுமி இருவரையும் கை காட்டியதாகவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், சிறுமி காலையில் அங்கன்வாடிக்கு அழைத்து வரும்போதே காலில் காயம் இருந்ததாகவும், சிறுமியை தங்களால் கவனிக்க முடியவில்லை என்றும், சிறுமி அடங்காமல் பொருட்களை கீழே போட்டு உடைப்பதாகவும் கூறிய அங்கன்வாடி ஊழியர்கள், இனிமேல் சிறுமியை அங்கன்வாடிக்கு அனுப்ப வேண்டாம் என எச்சரித்ததாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், அங்கன்வாடி மையத்தில் வைத்து சிறுமியை அடித்து துன்புறுத்தியதுடன், உடலில் சூடு வைத்ததாகவும் பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து சிறுமியின் பெற்றோர் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள சோமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தீக்காயம் ஏற்பட்ட சிறுமி அனன்யா, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், குழந்தைகள் உரிமை ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திலும் நடவடிக்கை கோரி புகார் அளித்துள்ளதாக பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிறுமியை அடித்து துன்புறுத்தி, உடலில் சூடு வைத்ததாக கூறப்படும் ஆசிரியை பாரதி மற்றும் பணியாளர் கனிமொழி ஆகியோரிடம் உரிய விசாரணை நடத்தி, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிறுமியின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுமி அனன்யாவுக்கு சிறு வயதிலேயே உதடு பிளவு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக பேச்சு தாமதமாக இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாகவும் பெற்றோர் கூறுகின்றனர். தற்போது சிறுமி “அம்மா, அப்பா” என்ற வார்த்தைகளை மட்டுமே பேசுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam