Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச)
மதுவுக்கும், போதைப்பொருட்களுக்கும் எதிராக கடந்த மே 11ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை 94 நாட்கள் தொடர்ந்து மௌனப் போராட்டம் மேற்கொண்ட சேலத்தைச் சேர்ந்த மூத்த காந்தியவாதியும் கல்வியாளருமான டாக்டர் சி. பிராங்க்ளின் ஆசாத் காந்தியின் அர்ப்பணிப்பை பாராட்டி, வீ தி லீடர்ஸ்
(We The Leaders )இயக்கத்தின் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக மதுவிலக்கை வலியுறுத்தி போராட்டம், பிரச்சாரம், சத்தியாகிரகம், பாதயாத்திரை உள்ளிட்ட பல்வேறு அகிம்சை வழிகளில் டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தி குரல் கொடுத்து வருவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
சேலத்திலிருந்து சபர்மதி, சேலத்திலிருந்து மதுரை என பல்வேறு நீண்ட பாதயாத்திரைகளை மேற்கொண்டு மக்களிடையே மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருக்குறளின் 1333 குறள்களைப் போல 1333 நாட்கள் தினமும் ஒன்றரை மணி நேரம் காந்தி சிலை முன்பு மதுவுக்கும் போதைப்பொருட்களுக்கும் எதிராக பதாகை ஏந்தி நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தியதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
95 வயதிலும் மதுபானம் உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு எதிராக அவர் வெளிப்படுத்தி வரும் மன உறுதி இளைய தலைமுறைக்கு முன்னுதாரணம் எனக் குறிப்பிட்டுள்ள அண்ணாமலை, தனது வாழ்நாளையே சமூக நலனுக்காக அர்ப்பணித்துள்ள டாக்டர் பிராங்க்ளின் ஆசாத் காந்தியின் மதுவிலக்கு போராட்டத்திற்கு தலைவணங்குவதாகவும், அவரது 50 ஆண்டுகளுக்கும் மேலான சமூகப் பணிகளுக்கு மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ