Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச)
அதிமுக துணைக் கொள்கைப் பரப்புச் செயலாளரும், அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளருமான அப்சரா ரெட்டி, அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், “மனதில் கனத்த உணர்வுடன், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து எனது விலகலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவுடனான தனது பயணம் வெறும் அரசியல் பயணம் அல்ல என்றும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான ஆழ்ந்த மரியாதை, அன்பு மற்றும் அவரது அரசியல் சிந்தனைகள் மீதான நம்பிக்கையே தன்னை அதிமுகவுடன் இணைத்ததாகவும் அப்சரா தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா முன்னெடுத்த மக்கள் சார்ந்த அரசியலையும், மரியாதை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறை மற்றும் சேவை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட அவரது அரசியல் பாதையையும் தான் எப்போதும் மதித்து வந்ததாகக் கூறியுள்ளார்.
“அரசியல் என்பது மக்களைப் பிரிப்பதற்காக அல்ல; அவர்களை ஒன்றிணைத்து அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இருக்க வேண்டும்” என்பதே தனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி வழங்கிய நம்பிக்கை, அன்பு, மரியாதை மற்றும் வாய்ப்புகளுக்காக மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள அப்சரா, அவர்மீதான தனது தனிப்பட்ட மரியாதையும் அன்பும் என்றும் மாறாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் இருந்து விலகும் முடிவு எந்தவித கசப்பினாலோ அல்லது தனிப்பட்ட வருத்தத்தினாலோ எடுக்கப்பட்டதல்ல என்றும், தனது நம்பிக்கைகளுக்கும் கொள்கைகளுக்கும் உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆழ்ந்த சிந்தனையின் அடிப்படையிலேயே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
அதிமுகவில் இருந்த காலம் தனது வாழ்க்கையின் முக்கியமான அத்தியாயமாக இருக்கும் என்றும், அந்தக் கட்சியின் மூலம் கிடைத்த அனுபவங்கள், பொறுப்புகள் மற்றும் மக்களுடன் இணைந்து பணியாற்றிய வாய்ப்புகளை என்றும் மதிப்புடன் நினைவுகூர்வேன் என்றும் அப்சரா தெரிவித்துள்ளார்.
தனது அரசியல் பயணம் இனி வேறு பாதையில் தொடரலாம் என்றாலும், மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்ற தனது நோக்கம் மாறாது என உறுதியளித்துள்ளார்.
ஜெயலலிதாவின் பாதையில் மக்களுக்கு தொடர்ந்து சேவை செய்வதும், மரியாதையுடனும் அன்புடனும் பணியாற்றுவதும் தனது உறுதியாக இருக்கும் என தெரிவித்துள்ள அப்சரா, அரசியல் முடிவைத் தாண்டியும் எடப்பாடி பழனிசாமியுடனான தனிப்பட்ட அன்பும் மரியாதையும் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என விருப்பம் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ