Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையில் 3.49 லட்சம் சொத்து உரிமையாளர்களுக்கு சொத்து வரி மறுமதிப்பீட்டு நோட்டீஸ்களை பெருநகர சென்னை மாநகராட்சி வழங்கியுள்ளது.
சென்னையில் சொத்து வரி உயர்வு எதுவும் செய்யப்படவில்லை என மாநகராட்சி விளக்கம் அளித்திருந்த நிலையில், தற்போது திடீரென மறுமதிப்பீட்டு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளதால் சொத்து உரிமையாளர்கள் குழப்பமடைந்துள்ளனர்.
முன்னதாக குறைவாக வரி மதிப்பிடப்பட்டதாக கண்டறியப்பட்ட சுமார் 3.5 லட்சம் சொத்துகளுக்கு இந்த மறுமதிப்பீட்டு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மறுமதிப்பீடு செய்யப்பட்ட 3.04 லட்சம் குடியிருப்பு சொத்துகளில் 55 சதவீத கட்டிடங்களுக்கு ரூ.1,000-க்கும் குறைவாகவே வரி உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், 95 சதவீத சொத்துகளுக்கு ரூ.5,000-க்குள் மட்டுமே வரி உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சொத்துகளின் சரியான பயன்பாடு மற்றும் வரி மதிப்பீட்டை உறுதி செய்வதற்காக ட்ரோன் அடிப்படையிலான GIS ஆய்வு, செயற்கைக்கோள் தரவுகள், தமிழ்நாடு மின்சார வாரியம் மற்றும் GST துறை தகவல்கள், சொத்து உரிமையாளர்களின் சுயவிவரங்கள் உள்ளிட்ட பல்வேறு தரவுகள் ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த ஆய்வில், குடியிருப்பு பயன்பாட்டுக்காக பதிவு செய்யப்பட்டுள்ள சில கட்டிடங்களில் வணிக நடவடிக்கைகள் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற சொத்துகள் குடியிருப்பு வகையாகவே கணக்கிடப்பட்டதால், அதற்கேற்ப குறைந்த வரி வசூலிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து முறையாக மறுமதிப்பீடு செய்து, சொத்தின் உண்மையான பயன்பாட்டிற்கு ஏற்ப வரி நிர்ணயம் செய்யும் நடவடிக்கையை மாநகராட்சி மேற் கொண்டு வருகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam