கோவை பொறியியல் மாணவர் கொலை வழக்கு - மதுரையைச் சேர்ந்த மாணவர் உட்பட 6 பேர் கைது
மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச) கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன், கோவையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் விடுதி சமையலரைத் தாக்கிய புகாரில் அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, வெளி
கோவை பொறியியல் மாணவர் கொலை வழக்கு - மதுரையைச் சேர்ந்த மாணவர் உட்பட 6 பேர் கைது


மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமுதன், கோவையில் உள்ள இந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை மாதம் விடுதி சமையலரைத் தாக்கிய புகாரில் அவர் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டு, வெளியில் அறை எடுத்து தங்கியிருந்தார்.

காவல் துறையின் முதற்கட்ட விசாரணையின்படி, கடந்த திங்கட்கிழமை அதிகாலை ஒரு வாடகை வீட்டிற்குள் முகமூடி அணிந்த கும்பல் புகுந்து மாணவர்களைத் தாக்கி செல்போனைப் பறித்துள்ளது. இந்தத் தாக்குதலில் அமுதனுக்குத் தொடர்பு இருப்பதாக இரண்டாம் ஆண்டு மாணவர்கள் சந்தேகப்பகை கொண்டுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த சக மாணவர்கள் கும்பலாகச் சேர்ந்து, கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்த அமுதன் மற்றும் அவரது நண்பர் ஸ்ரீமனை வழிமறித்துக் கல்லூரிக்கு பின்புறம் உள்ள மைதானத்திற்கு இழுத்துச் சென்று இரும்பு கம்பி மற்றும் மரக்கட்டைகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.

தாக்குதலுக்குப் பின் அறைக்குத் திரும்பிய அமுதனுக்குக் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த வழக்கை விரைந்து விசாரித்து குற்றவாளிகளை கைது செய்ய கோவை மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி ஏற்கனவே 17 வயது சிறுவன் உட்பட 5 பேரை கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில் பல முக்கிய தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இந்த கொலை வழக்குடன் தொடர்புடைய முக்கிய நபராக கருதப்படும் மதுரையைச் சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவனுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மதுரை விரைந்து சென்று சந்தோஷை கைது செய்தனர்.

இந்த கைதின் மூலம் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆறாக உயர்ந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தோஷிடம் கொலைக்கான காரணம், மற்றவர்களுடன் உள்ள தொடர்பு குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

மேலும் இவ்வழக்கில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b