Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான எழும்பூர் ரயில் நிலையத்தில் மிகப்பெரிய மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் சுமார் 734.91 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த நவீனமயமாக்கல் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, காந்தி இர்வின் சாலை பகுதியில் அமைந்துள்ள 1-ம் நடைமேடை முதல் 5-ம் நடைமேடை வரையில் புதிய இரும்பு நடைமேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை விரைவாகவும் பாதுகாப்பாகவும் முடிப்பதற்காக 1 முதல் 5 வரையிலான நடைமேடைகள் தற்காலிகமாக மூடப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முன்னதாக 10 மற்றும் 11-ம் நடைமேடைகளில் இதேபோன்ற மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றபோது, அங்கிருந்து இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் 5 மற்றும் 6-ம் நடைமேடைகளுக்கு மாற்றப்பட்டன. அதேபோல் தற்போது 1 முதல் 5 வரையிலான நடைமேடைகள் மூடப்படுவதால், அங்கிருந்து புறப்பட வேண்டிய விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன் காரணமாக எழும்பூரில் இருந்து புறப்பட வேண்டிய சில முக்கிய விரைவு ரயில்கள் தாம்பரம் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சில ரயில்கள் சென்ட்ரல் மற்றும் மாம்பலம் போன்ற மாற்று நிலையங்களில் நின்று செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பணிகள் நிறைவடைந்த பின்னர் 1 முதல் 11 வரையிலான அனைத்து நடைமேடைகளையும் இணைக்கும் வகையில் நவீன நடைமேம்பாலம், நவீன பயணிகள் வசதிகள், லிஃப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகளுடன் எழும்பூர் ரயில் நிலையம் புதிய பொலிவுடன் காட்சியளிக்கும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனவே பயணிகள் தங்களது பயணத்திற்கு முன் ரயில் புறப்படும் நிலையம் குறித்த அறிவிப்புகளை சரிபார்த்துக் கொள்ளுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக்கொண்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b