Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நமஸ்கரித்தான்பட்டியில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியும், வருத்தமும் அளிப்பதாக பாஜக மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
பட்டாசு ஆலை வெடிவிபத்துகளுக்கு ஒரு முடிவே இல்லையா என்ற கேள்வி எழும் வகையில், ஆண்டுதோறும் இதுபோன்ற விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அச்சமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் சிவகாசியில் ஆண்டுக்கு சுமார் ரூ.6,000 கோடி அளவுக்கு பட்டாசு வர்த்தகம் நடைபெறுவதாகவும், அங்குள்ள பெரும்பாலான ஆலைகளில் பாதுகாப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படாமலும், உரிய உரிமம் இல்லாமலும் செயல்படுவதே தொடர் விபத்துகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பதாகவும் வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், பட்டாசு ஆலை விபத்துகளுக்குப் பிறகு வெறும் நிவாரணத் தொகை வழங்குவதுடன் தமிழக அரசு கடந்து செல்லக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முறையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாத பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என்றும், பட்டாசு ஆலைகளில் பணியாற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும் காப்பீடு உள்ளிட்ட உரிய பாதுகாப்பு மற்றும் நலத்திட்டச் சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தமிழக அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P