Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு வட்டம், காமநாயக்கன்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற புனித பரலோக மாதா பேராலயத்தில் ஆண்டுதோறும் நடைபெறும் விண்ணேற்பு பெருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
இத்திருவிழாவினை முன்னிட்டு, வருகிற 14.08.2026 (வெள்ளிக்கிழமை) அன்று தூத்துக்குடி மாவட்டம் முழுவதற்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆகஸ்டு 15-ஆம் நாள் கொண்டாடப்படும் இத்திருவிழாவின் 9-ஆம் நாள் திருவிழா (14.08.2026) உச்சகட்டமாக இருப்பதாலும், பல்வேறு பகுதிகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவதாலும் மாணவர்களின் நலன் கருதி உள்ளூர் விடுமுறை வழங்க மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்திருந்தார்.
14.08.2026 அன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கும் மற்றும் மாநில அரசு அலுவலகங்களுக்கும் (தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில்) உள்ளூர் விடுமுறை அளிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு, 22.08.2026 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாகச் செயல்படும்.
இந்த விடுமுறை நாளானது செலாவணி முறிச்சட்டம் 1881-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால், அவசர அலுவலகப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b