ஆகஸ்ட் 22ல் சென்னையில் பிரமாண்ட தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) சென்னையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெ
Grand private sector job fair in Chennai on August 22


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

சென்னையில் வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு மிகப்பெரிய வாய்ப்பு காத்திருக்கிறது. மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஆகஸ்ட் 22-ஆம் தேதி நடைபெற உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் அறிவித்துள்ளார்.

இந்த வேலைவாய்ப்பு முகாம் ஆகஸ்ட் 22-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை அசோக் நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெறும். இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளன. இதன் மூலம் சுமார் 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாமின் சிறப்பம்சம் என்னவென்றால், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் 10, 12-ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை பட்டப்படிப்பு வரை படித்த அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம். தகுதிக்கேற்ப பல்வேறு துறைகளில் பணி வாய்ப்புகள் வழங்கப்படும்.

வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்க விரும்புவோர் தங்களது கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பயோடேட்டா மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேரில் வரலாம்.

மேலும் முன்பதிவு செய்ய விரும்புவோர் கிண்டியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் அணுகி பதிவு செய்து கொள்ளலாம் என்றும், இந்த வாய்ப்பை சென்னை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b