Enter your Email Address to subscribe to our newsletters

நாமக்கல், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள மூலப்பள்ளிப்பட்டி பகுதியில் இன்று சேலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் காரில் பயணித்துக் கொண்டிருந்தபோது எதிரே வந்த லாரி மீது கார் எதிர்பாராதவிதமாக மோதியதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தின் தீவிரத்தில் கார் முன்பகுதி முற்றிலும் நொறுங்கியது.
இந்த விபத்தில் காரில் பயணித்த சேலத்தைச் சேர்ந்த அமுதா (52) மற்றும் அவரது பேரன் நிஜீத் (2) ஆகிய இருவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் காரில் இருந்த குழந்தை நிஜீத்தின் தந்தை பிரவீன், தாய் கோமதி, மற்றொரு குழந்தை ஜீவித் மற்றும் தாத்தா நடேசன் ஆகிய நான்கு பேரும் படுகாயமடைந்தனர்.
விபத்தைக் கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b