Enter your Email Address to subscribe to our newsletters

கிருஷ்ணகிரி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த தேன்கனிக்கோட்டை அருகே பள்ளி முடித்துவிட்டு வீட்டிற்கு நடந்து சென்ற 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வரும் 8 வயது சிறுமி, நேற்று மாலை வழக்கம்போல் பள்ளி வகுப்புகள் முடிந்த பின்னர் தனது சொந்த கிராமத்திற்கு நடந்து சென்றுள்ளார்.
அப்போது வழியில் மர்ம நபர் ஒருவர் சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது.
பின்னர் சிறுமியை அந்த நபர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமி மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு சிறுமிக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
சிறுமியை அழைத்துச் சென்றதாக கூறப்படும் மர்ம நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், சம்பவம் நடைபெற்ற இடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் குற்றவாளியை அடையாளம் காணும் பணியிலும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam