சாலை வசதி இல்லாததால் நோயாளியை தொட்டில் கட்டி சுமந்து சென்ற கிராம மக்கள்
மூணாறு , 13 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலக்குடி கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவரை கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதையில் தோளில் சுமந்து சென்று மரு
A


மூணாறு , 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடமலக்குடி கிராமத்தில் சாலை வசதி இல்லாததால் உடல்நலம் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவரை கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமார் 5 கிலோமீட்டர் தூரம் காட்டுப்பாதையில் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அடர்ந்த காடுகளுக்கு நடுவே இடமலக்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு நீண்ட காலமாக முறையான சாலை வசதி இல்லை.

இதனால் கிராம மக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கும், மருத்துவ சிகிச்சைக்காகவும் பல கிலோமீட்டர் தூரம் மலைப்பாதையில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மழையால் பாதை மோசம்

தற்போது பருவமழை காரணமாக மலைப்பாதைகள் சேறும் சகதியுமாக மாறியுள்ளன. பல இடங்களில் பாதைகள் பயன்படுத்த முடியாத அளவுக்கு மோசமடைந்துள்ளதால், நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதில் கிராம மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இடமலக்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கூடல்லார்குடியை சேர்ந்த மலையப்பன் (75) என்பவர் கடந்த ஒரு வாரமாக வயிற்றுவலி, காய்ச்சல் மற்றும் உடல் வலியால் அவதிப்பட்டு வந்தார். காலை அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

இதையடுத்து, அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல கிராம மக்கள் முடிவு செய்தனர்.

ஆனால் சாலை வசதி இல்லாததால் வாகனம் செல்ல முடியவில்லை. இதனால் சேலையை பயன்படுத்தி தொட்டில் போன்று அமைத்து, அதனை மூங்கில் கம்பில் கட்டினர்.

பின்னர் மலையப்பனை அந்த தொட்டிலில் படுக்க வைத்து, முன்னும் பின்னுமாக இருவர் தோளில் சுமந்தபடி காட்டுப்பாதையில் நடந்து சென்றனர்.

5 கிலோமீட்டர் சுமந்து சென்றனர்

ஒருவருக்கு ஒருவர் மாறி மலையப்பனை சுமார் 5 கிலோமீட்டர் தூரம் சுமந்து சென்று சாலை வசதி உள்ள அனைக்குளம் பகுதியை அடைந்தனர். அங்கிருந்து ஆட்டோவில் அவரை ஏற்றி அடிமாலி தாலுகா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக சேர்த்தனர்.

மலையப்பனை கிராம மக்கள் தொட்டில் கட்டி சுமந்து சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இந்த காட்சிகள் மூலம் இடமலக்குடி கிராம மக்கள் நீண்ட காலமாக அனுபவித்து வரும் சாலை மற்றும் போக்குவரத்து பிரச்சினைகள் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ளன.

குழந்தை உயிரிழப்பு

சாலை வசதி இல்லாததால் அவசர மருத்துவ உதவி கிடைப்பதில் இடமலக்குடி மக்கள் தொடர்ந்து சிரமங்களை சந்தித்து வருகின்றனர். ஏற்கனவே சாலை வசதி இல்லாததால் மருத்துவமனைக்கு உரிய நேரத்தில் அழைத்துச் செல்ல முடியாமல் ஒரு குழந்தை உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

எனவே, இடமலக்குடி கிராமத்திற்கு முறையான சாலை வசதியை ஏற்படுத்துவதுடன், அவசர காலங்களில் நோயாளிகளை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தேவையான போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்த வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA