ரூ.40 லட்சம் கொடுத்தால் உங்கள் பெயரில் அரசு பஸ் - நஷ்டத்தை சமாளிக்க கேரள அரசு போக்குவரத்துக்கழகம் புதிய முயற்சி
திருவனந்தபுரம் , 13 ஆகஸ்ட் (ஹி.ச.) கேரள அரசு போக்குவரத்துக்கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், புதிய பஸ்களை வாங்குவதற்காக நிதி திரட்டும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ரூ.40 லட்சம் நன்கொடையாக வழங்கும் நிறுவனங்கள் மற்றும்
A


திருவனந்தபுரம் , 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

கேரள அரசு போக்குவரத்துக்கழகம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வரும் நிலையில், புதிய பஸ்களை வாங்குவதற்காக நிதி திரட்டும் புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளது.

அதன்படி, ரூ.40 லட்சம் நன்கொடையாக வழங்கும் நிறுவனங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பெயரில் அரசு பஸ்களை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

கேரள அரசு போக்குவரத்துக்கழகத்தில் ஏராளமான பஸ்கள் காலாவதியான நிலையில் உள்ளன.

அவற்றுக்கு பதிலாக புதிய பஸ்களை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ள போதிலும், அதற்கான போதிய நிதி இல்லாமல் போக்குவரத்துக்கழகம் தவித்து வருகிறது.

இந்த நிலையில், புதிய பஸ்களை வாங்குவதற்காக தனியார் நிறுவனங்கள், கூட்டுறவு சங்கங்கள் உள்ளிட்ட அமைப்புகளிடம் இருந்து நன்கொடை பெறும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ரூ.40 லட்சம் வழங்கும் அமைப்பின் பெயரை சம்பந்தப்பட்ட பஸ்சுக்கு சூட்டி இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான தொடக்கமாக கோழிக்கோடு நகர சர்வீஸ் கூட்டுறவு வங்கி, புதிய பஸ் வாங்குவதற்காக கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு ரூ.40 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளது.

இதைத்தொடர்ந்து, 100-க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்கள் புதிய பஸ்களை வாங்குவதற்கு தங்களது பொது நிதியில் இருந்து நன்கொடை வழங்க ஒப்புதல் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

கேரள அரசு போக்குவரத்துக்கழகம் ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது.

பஸ்களை இயக்குவதால் ஏற்படும் செலவுகளை சமாளிக்க முடியாமல் நஷ்டம் அதிகரித்து வரும் நிலையில், பெண்களுக்கான இலவச பஸ் பயண சேவையும் கூடுதல் நிதிச்சுமையை ஏற்படுத்தியுள்ளது.

பெண்களுக்கான இலவச சேவையால் போக்குவரத்துக்கழகத்துக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.800 கோடி கூடுதல் நஷ்டம் ஏற்படும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனால் பழைய பஸ்களை மாற்றி புதிய பஸ்களை வாங்குவதற்கும், போக்குவரத்துக்கழகத்தின் செயல்பாடுகளை தொடர்ந்து மேற்கொள்வதற்கும் நிதி திரட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நன்கொடை மூலம் புதிய பஸ்களை வாங்கும் திட்டத்தை கேரள அரசு போக்குவரத்துக்கழகம் தீவிரப்படுத்தி உள்ளது.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA