Enter your Email Address to subscribe to our newsletters

திண்டுக்கல், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நகர் மற்றும் கிராமப்புறங்களில் கனமழை பெய்து வருகிறது.
பருவமழை போதிய அளவில் பெய்யாததால் கொடைக்கானலில் உள்ள பெரும்பாலான நீர்நிலைகள் வறண்டு காணப்படுகின்றன. இதனால், கொடைக்கானல் பகுதியில் கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கொடைக்கானலில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வந்தது.
இன்று காலை முதலே வானம் கருமேகங்களால் சூழப்பட்ட நிலையில், கொடைக்கானல் நகர் பகுதியில் செண்பகனூர் பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.
கனமழையுடன் சாலைகளில் கடும் பனிமூட்டமும் நிலவி வருகிறது.
இதனால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத நிலை ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி வாகனங்களை இயக்கி வருகின்றனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் கொடைக்கானல் பகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவி வருவதுடன், வறண்டு கிடந்த நீர்நிலைகளுக்கு நீர்வரத்து ஏற்படும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam