நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத காப்பீட்டு அதிகாரியை கைது செய்ய உத்தரவு
மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ காப்பீட்டுத் தொகையை வழங்காததாகக் கூறப்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத
உயர்நீதிமன்ற மதுரை கிளை


மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

நீதிமன்ற உத்தரவின்படி மருத்துவ காப்பீட்டுத் தொகையை வழங்காததாகக் கூறப்படும் யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சென்னை மாநகர காவல் ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

நாகர்கோவிலைச் சேர்ந்த ஓய்வுபெற்ற பொதுப்பணித்துறை ஊழியர் ஜார்ஜ் சாமுவேல், தமக்கும் தனது மனைவிக்கும் மருத்துவ காப்பீடு செய்திருந்ததாக மனுவில் தெரிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு அவரது மனைவிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், நாகர்கோவிலில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

இதற்காக ரூ.99 ஆயிரம் செலவானதாகவும், ஆனால் காப்பீட்டு நிறுவனம் அந்தத் தொகையை வழங்கவில்லை என்றும் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விக்டோரியா கௌரி, மருத்துவச் செலவுக்கான அசல் ஆவணங்களை காப்பீட்டு நிறுவனத்திடம் நேரில் சமர்ப்பிக்குமாறு மனுதாரருக்கு உத்தரவிட்டிருந்தார்.

மேலும், ஆவணங்களைப் பெற்ற பிறகு காப்பீட்டு நிறுவனம் உரிய முடிவை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்திருந்தார்.

ஆனால், நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னரும் காப்பீட்டுத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறி, ஜார்ஜ் சாமுவேல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீண்டும் நீதிபதி விக்டோரியா கௌரி முன்பு விசாரணைக்கு வந்தபோது, காப்பீட்டு நிறுவனம் சார்பில் வழக்கறிஞர் யாரும் ஆஜராகாததால் நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.

இதையடுத்து, சென்னை மாநகர காவல் ஆணையரை எதிர்மனுதாரராக தாமாக முன்வந்து சேர்த்த நீதிபதி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவன அதிகாரி சஞ்சய் குமார் ஜாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சென்னை மாநகர காவல் ஆணையருக்கு உத்தரவிட்டார்.

இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை செப்டம்பர் மாதத்திற்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P