கனிமச் சட்டத் திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தல் - மாணிக்கம் தாகூர்
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) மாநிலங்களின் உரிமையை பறிக்கும் கனிமச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக
Manickam


Uhh


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

மாநிலங்களின் உரிமையை பறிக்கும் கனிமச் சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என வலியுறுத்தியதாக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாக்கூர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் ஆகியோருடன் இணைந்து சபாநாயகரை சந்தித்து, கனிமச் சட்டத் திருத்த மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் நடைபெற்ற இந்த சந்திப்பில், சபாநாயகரின் அறிவுறுத்தலின்படி மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி மற்றும் அதிகாரிகளுடன் கூட்டம் நடைபெற்றதாகவும், இதில் மதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கலந்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

புதிய சட்டப்பிரிவு 9டி மூலம் மாநிலங்களின் வரி விதிக்கும் உரிமை பறிக்கப்படுவதாகவும், 2017ஆம் ஆண்டு ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு கனிம வரி மாநிலங்களின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக மாறியுள்ள நிலையில், 2025-26ஆம் ஆண்டில் தமிழ்நாடு ரூ.4,100 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும் மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

2026-27ஆம் ஆண்டில் ரூ.11,000 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சட்டத் திருத்தம் தமிழ்நாட்டிற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பழைய நிலுவை வரித் தொகையை ரத்து செய்வதும், கடந்த 2024 ஜூலை 25ஆம் தேதி உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு வழங்கிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பின் தாக்கத்தை நீர்த்துப்போகச் செய்வதும் இந்த மசோதாவில் உள்ள ஆபத்துகள் என தெரிவித்துள்ளார்.

இத்தகைய மாநில உரிமைகளுக்கு எதிரான மசோதாவை நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப மத்திய அமைச்சர் மறுப்பது மிகுந்த வருத்தமளிப்பதாக மாணிக்கம் தாக்கூர் கூறியுள்ளார்.

மேலும், பாஜக கூட்டணியில் உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டின் நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், வெளியே அறிக்கை வெளியிடுவதுடன் நிறுத்திக் கொள்ளாமல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து இந்த மசோதாவுக்கு எதிர்ப்பை பதிவு செய்வார்களா என்றும் மாணிக்கம் தாக்கூர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ