Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
சாதிவாரி கணக்கெடுப்பை அறிவியல் ரீதியாகவும், துல்லியமாகவும் நடத்துவதற்கான முறைகளை வகுக்க வேண்டும் என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாக்கூர் கடிதம் எழுதியுள்ளார்.
வரும் 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ள நிலையில், அதற்கான நடைமுறைகள் குறித்து கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி பிரதமருக்கு கடிதம் எழுதியதாக மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
அந்தக் கடிதத்தில்,
கடந்த 2011ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பில் சாதிப் பெயர்களை திறந்த முறையில் பதிவு செய்ததால் சுமார் 46 லட்சம் வெவ்வேறு சாதிப் பதிவுகள் உருவானதாகக் குறிப்பிட்டுள்ளார்.
1931ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் 4,147 சாதிகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்த நிலையில், 2011ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் சாதிப் பெயர்கள் அதிகளவில் பிரிந்து பதிவானதால், அந்தத் தரவுகளை பயனுள்ள வகையில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.
எனவே, 2027ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் முன்கூட்டியே தயாரிக்கப்பட்டு, குறியீடு செய்யப்பட்ட சாதிப் பட்டியலை பயன்படுத்த வேண்டும் என மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஒவ்வொரு சாதிக்கும் தனித்துவமான குறியீடு வழங்குவதுடன், எழுத்துப்பிழை மற்றும் உச்சரிப்பு வேறுபாடுகளால் ஒரே சாதி வெவ்வேறு பெயர்களில் பதிவாகாமல் இருக்க மின்னணு முறையிலான சரிபார்ப்பு நடைமுறையையும் கொண்டு வர வேண்டும் எனக் கோரியுள்ளார்.
தெலங்கானாவில் பின்பற்றப்பட்டு வரும் சமூக, கல்வி, பொருளாதார மற்றும் அரசியல் பின்னடைவு குறித்த கணக்கெடுப்பு முறையையும் கருத்தில் கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
சமூகநீதியை உறுதி செய்வதற்கு அறிவியல் ரீதியாக துல்லியமான சாதிவாரி தரவுகள் அவசியம் எனவும், எனவே 2027ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் உரிய முறைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் மாணிக்கம் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ