Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனை வளாகத்தில் 2026-27ஆம் கல்வியாண்டிற்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியது.
முதற்கட்டமாக விளையாட்டுப் பிரிவு, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு நேரடி முறையில் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.
இதற்காக விளையாட்டுப் பிரிவில் 468, முன்னாள் படைவீரர்களின் வாரிசுகள் பிரிவில் 524, மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 212 என மொத்தம் 1,204 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
காலை 8 மணிக்கு விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கும், 8.30 மணிக்கு முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளில் தரவரிசை எண் 1 முதல் 30 வரையிலான மாணவர்களுக்கும், 9 மணிக்கு தகுதியான அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறுகிறது.
தொடர்ந்து, காலை 10 மணிக்கு 7.5 சதவீத அரசு பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீட்டு கலந்தாய்வு தொடங்குகிறது.
கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாக வருகை தருவதுடன், நீட் அனுமதி அட்டை, மதிப்பெண் அட்டை, 10, 11, 12ஆம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் உள்ளிட்ட தேவையான அசல் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், கலந்தாய்வு நடைபெறும் வளாகத்திற்குள் செல்போன் உள்ளிட்ட தொடர்பு சாதனங்களுக்கு அனுமதி இல்லை என மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக் குழு தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ