நயினார் நாகேந்திரன் சொந்த மாவட்டத்திலேயே பா.ஜ.க-வுக்கு கூட்டம் இல்லையா? – தேசியக்கொடி பேரணியில் பரபரப்பு
நெல்லை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நெல்லை டவுனில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றத
நயினார் நாகேந்திரன்


நெல்லை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுதோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் வேண்டுகோளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், நெல்லை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நெல்லை டவுனில் தேசியக்கொடி பேரணி நடைபெற்றது.

நெல்லை டவுன் வாகையடி முனையில் தொடங்கிய பேரணி, சந்திப்பிள்ளையார் கோவில், லாலா சத்திரம் முக்கு, ஈசான விநாயகர் கோவில், சத்தியமூர்த்தி தெரு வழியாக நெல்லை டவுன் ஆர்ச்சில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்ற பாஜகவினர் தேசியக்கொடியை ஏந்தியபடி ‘வந்தே மாதரம்’ என முழக்கமிட்டனர்.

இந்த பேரணியை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தொடங்கி வைப்பார் என முதலில் அறிவிக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.

ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு தொண்டர்கள் திரளாததால் அவர் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் முத்து பலவேசம் பேரணியை தொடங்கி வைத்தார்.

நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டமான நெல்லையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அவர் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டிருந்தும் பங்கேற்காதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

மாநில தலைவர் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட தலைவர் மூலம் பேரணி தொடங்கப்பட்ட சம்பவம் பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே, செய்தியாளர்கள் புகைப்படம் எடுக்கத் தொடங்கியபோது பேரணியில் பங்கேற்றவர்கள் தன்னிச்சையாக முன்னோக்கி நகர்ந்தனர்.

இதனை கவனித்த மாவட்ட நிர்வாகிகள், “பேரணி இன்னும் தொடங்கவில்லை... நகர வேண்டாம்” என தொண்டர்களிடம் கூறியதால் அங்கு சிறிது நேரம் சிரிப்பலை ஏற்பட்டது.

இதையடுத்து, நயினார் நாகேந்திரனின் சொந்த மாவட்டத்திலேயே எதிர்பார்த்த அளவுக்கு கூட்டம் திரளாதது பாஜகவின் கள நிலவரம் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.

இது கட்சியின் அமைப்பு பலம் குறைந்ததன் வெளிப்பாடா அல்லது நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஏற்பட்ட பின்னடைவா என்ற விவாதமும் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam