Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ஆவணி மூலத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
11 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு நெல்லையப்பர் சுவாமி, காந்திமதி அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்ந்து கொடி பட்டம் பல்லக்கில் வைத்து திருவீதி உலா கொண்டு வரப்பட்டு, சுவாமி சன்னதி முன்பு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையடுத்து சுவாமி சன்னதி முன்புள்ள சிறிய தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.
கொடிமரத்திற்கு இளநீர், மஞ்சள், தயிர், பால் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் கலச அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கொடிமரம் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று நெல்லையப்பர் சுவாமி மற்றும் காந்திமதி அம்பாளை வழிபட்டனர்.
ஆவணி மூலத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக கருவூர் சித்தர் மானூர் அம்பலம் புறப்படும் நிகழ்ச்சியும், தொடர்ந்து கருவூர் சித்தருக்கு நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் காட்சி அளித்து சாப நிவர்த்தி வழங்கும் நிகழ்ச்சியும் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ளது என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ