கோயில் திருவிழாவில் ஆபாச உடையில் கரகாட்டமா? -தாமாக முன் வந்து வழக்கு பதிவு
மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்
கோயில் திருவிழாவில் ஆபாச உடையில் கரகாட்டமா? தாமாக முன்வந்து வழக்கு பதிவு - நீதிமன்றம் கடும் எச்சரிக்கை


மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் உள்ள கோயில் திருவிழாவில் கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி மறுக்கப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கிராமிய கலையான கரகாட்டத்தை தடை செய்ய முடியாது என்றும், அதே நேரத்தில் கோயில் என்பது பக்தியும் பாரம்பரியமும் சார்ந்த இடம் என்பதால் அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கரகாட்டம் உள்ளிட்ட ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாச நடனம் இருக்கக்கூடாது என்றும், நடன கலைஞர்கள் நாகரிகமான, கண்ணியமான உடைகளை அணிய வேண்டும் என்றும் நீதிமன்றம் திட்டவட்டமாக உத்தரவிட்டுள்ளது.

கோயில் திருவிழாக்கள் மக்கள் அனைவரும் குடும்பத்துடன் கூடி கொண்டாடும் நிகழ்வு என்பதால், இரட்டை அர்த்த வசனங்கள், ஆபாச அசைவுகள், சாதி, மத, அரசியல் ரீதியான பாடல்களை பாடுவதையும் முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உத்தரவை மீறி, ஆபாச உடை அணிந்து கரகாட்டம் ஆடினாலோ அல்லது ஆபாச நடனம் நடந்தாலோ, அதை நீதிமன்றமே தாமாக முன்வந்து கவனத்தில் எடுத்து வழக்கு பதிவு செய்யும் என்றும், தொடர்புடைய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் நடன கலைஞர்கள் மீது தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என்றும் உயர்நீதிமன்றம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று தொடங்கவுள்ள உடையார்பாளையம் கோயில் திருவிழாவில், இந்த நிபந்தனைகளுக்கு உட்பட்டு கரகாட்ட நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

நிகழ்ச்சியின் போது சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், நீதிமன்ற நிபந்தனைகள் மீறப்படாமல் இருப்பதை கண்காணிக்கவும் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b