கோயில் சொத்துகளை மீட்டெடுக்க நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படும் - பொன்மணி ஐ.ஏ.எஸ்.
திண்டுக்கல், 13 ஆகஸ்ட் (ஹி.ச.) திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், சட்டவிரோதப் பெயர் மாற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளில் சிக்கி வரும் நிலையில், கோயில் சொத்துகளை முழும
Land Issue


திண்டுக்கல், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்குச் சொந்தமான பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள், சட்டவிரோதப் பெயர் மாற்றங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளில் சிக்கி வரும் நிலையில், கோயில் சொத்துகளை முழுமையாகப் பாதுகாக்கும் வகையில் அரசு முடிவெடுத்துள்ளது.

இதன் முதற்கட்டமாக, திருக்கோயில் சொத்துகளை முழுமையாக ஆய்வு செய்து பாதுகாக்கும் பொருட்டு, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளை இணைத்து ஒரு புதிய பிரத்யேக ஆய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இச்சிறப்புக் குழுவின் தலைவரான பொன்மணி ஐ.ஏ.எஸ்., தலைமையில் அதிகாரிகள் குழுவினர் இன்று பழனி திருக்கோயில் தேவஸ்தான தலைமை அலுவலகத்திற்கு வருகை தந்தனர்.

அங்கு அறநிலையத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கோயில் சொத்துகள், கணக்கில் உள்ள வருவாய் இனங்கள், கணக்கில் வராத சொத்துகள் மற்றும் சட்டவிரோதப் பெயர் மாற்றங்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

ஆலோசனைக்குப் பின்னர், பொன்மணி ஐ.ஏ.எஸ் தலைமையிலான குழுவினர் தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் மற்றும் அதனைச் சார்ந்த உப கோயில்களுக்குச் சொந்தமான நிலங்கள், கட்டடங்களை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பொன்மணி ஐ.ஏ.எஸ்,

அறநிலையத்துறை வசம் ஏற்கனவே அனைத்துக் கோயில்களுக்குமான சொத்துப் பதிவேடுகள் (Property Registers) உள்ளன.

தற்போது இந்தக் குழு மூலமாக அனைத்துச் சொத்துகளையும் மீண்டும் ஒருமுறை 'ரீ-செக்' (Re-check) செய்து சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள கோயில் சொத்துகளைப் பொறுத்தவரை, நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் உத்தரவுகள் வரும்போது அதற்கேற்பப் பராமரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த ஆய்வுக் குழுவானது அறநிலையத்துறை, வருவாய்த்துறை (RDO), நில அளவைத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் வட்டாட்சியர் உள்ளிட்டோர் அடங்கிய ஒரு ஒருங்கிணைப்புக் குழுவாகும் (Coordination Committee).

இதன் மூலம் துறைகளுக்கிடையேயான கூட்டு அமர்வுகள் (Joint Sitting) நடத்தப்பட்டு, கோயில் சொத்துகளை மீட்டெடுக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒருங்கிணைந்து வேகப்படுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN