தொகுதி மறுவரையறை குறித்து ஆதவ் அர்ஜுனாவின் கருத்துகளுக்கு பா.ஜ.க கடும் கண்டனம்
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) தொகுதி மறுவரையறை தொடர்பாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாடு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இ
பாஜக


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

தொகுதி மறுவரையறை தொடர்பாக தவெக தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா தெரிவித்த கருத்துகளுக்கு தமிழ்நாடு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜக வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

இன்னும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத தொகுதி மறுவரையறை மசோதா குறித்து ஆதவ் அர்ஜுனா

‘Fake Theories’ எனப்படும் தவறான தகவல்களை பரப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல” என விமர்சித்துள்ளது.

மேலும், தமிழக சட்டமன்றத்தில் மூத்த உறுப்பினராக உள்ள பாஜக எம்எல்ஏ போஜராஜனை பார்த்து, “உங்கள் குரல் தமிழகத்திற்கு கேட்காது என ஆதவ் அர்ஜுனா பேசியிருப்பது அவரது ஆணவத்தை வெளிப்படுத்துவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ள தகவல்கள் பொய்யானவை என்றும், முன்னுக்குப் பின் முரணானவை என்றும் குறிப்பிட்டுள்ள பாஜக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள 50 சதவீத அதிகரிப்பு அடிப்படையில் தமிழகத்தின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 39-ல் இருந்து 59 ஆக உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

இதன் மூலம் நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் 7.18 சதவீதத்தில் இருந்து 7.23 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் பாஜக கூறியுள்ளது.

மேலும், வடமாநிலங்களுக்கு மட்டுமே பயன் கிடைக்கும் என்ற நோக்கம் மத்திய அரசுக்கு இருந்திருந்தால், 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொண்டிருக்கலாம் என்றும், அப்படி செய்தால் உத்தரப் பிரதேசத்திற்கு சுமார் 140 தொகுதிகள் கிடைத்திருக்கும் என்றும் பாஜக தெரிவித்துள்ளது.

அனைத்து மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் நோக்கில்

‘Uniform 50% Increase Model’ முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் தமிழகத்திற்கு கூடுதலாக 20 மக்களவைத் தொகுதிகள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் பாஜக விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்காவின் வாக்குச்சீட்டு முறையை உதாரணமாகக் கொண்டு ஆதவ் அர்ஜுனா பேசியதையும் பாஜக விமர்சித்துள்ளது. EVM மூலம் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்துள்ள நிலையில், EVM குறித்து கேள்வி எழுப்புவது முரண்பாடானது எனவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.

மேலும், சட்டப்பேரவையில் அமெரிக்கா, அயர்லாந்து, அண்டார்டிகா உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு பேசுவதால் ஒருவர் அதிமேதாவியாகிவிட முடியாது என்றும் பாஜக விமர்சித்துள்ளது.

அவையின் மாண்பையும் அரசியல் நாகரிகத்தையும் புரிந்துகொள்ளாமல் ஆதவ் அர்ஜுனா பேசுவதால்தான், அவர் கூறும் பல கருத்துகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும் பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

இறுதியாக, தொகுதி மறுவரையறை மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டவுடன் ஆதவ் அர்ஜுனா தெரிவித்ததாகக் கூறப்படும் “பொய்கள்” அனைத்தும் தூள் தூளாகிவிடும் என பாஜக தெரிவித்துள்ளது.

தாங்கள் முன்வைத்துள்ள கருத்துகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், தனது தோல்வியை ஒப்புக்கொண்டு அரசியலை விட்டு வெளியேறும் துணிவு ஆதவ் அர்ஜுனாவுக்கு உள்ளதா எனவும் பாஜக பகிரங்க சவால் விடுத்துள்ளது.

Hindusthan Samachar / VINOTH KUMAR P