Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து குவாரிகளையும் அரசு ஏற்று நடத்துவதுடன், அவற்றை கண்காணிக்க உரிய அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என கோரிய பொதுநல வழக்கில், தமிழக அரசின் இயற்கை வளத்துறை செயலாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிக்கோடு பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஓ.ஹோமர்லால், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார் அதில், பட்டா மற்றும் புறம்போக்கு நிலங்களில் செயல்படும் குவாரிகளில் பல்வேறு விதிமீறல்கள் நடைபெறுவதாகவும், அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக கனிமங்கள் வெட்டி எடுக்கப்பட்டு பிற பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தார்.
குவாரிகளில் எடை மேடை, சிசிடிவி உள்ளிட்ட கண்காணிப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்றும், கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு அதிகளவில் கனிமங்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது. மேலும், அதிக பாரம் ஏற்றிச் செல்லும் டிப்பர் லாரிகளால் சாலைகள் சேதமடைவதுடன், விபத்து அபாயமும் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
குவாரிகளை அரசு ஏற்று நடத்துவதன் மூலம் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியும் என்றும், பொதுமக்களுக்கு கனிமங்களை உரிய விலையில் வழங்குவதுடன் அரசுக்கு வருவாய் மற்றும் வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும் என்றும் மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சுரங்கங்கள் மற்றும் கனிமங்களை ஒழுங்குபடுத்துவது தொடர்பான சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் மூலம் மாநில அரசிடம் இருந்த சில அதிகாரங்கள் மத்திய அரசுக்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். குறிப்பாக, கனிம வளங்களை ஒழுங்குபடுத்துவதில் மாநில அரசின் அதிகாரத்தை குறைத்து மத்திய அரசுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர்.
இந்த விவகாரம் முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்ட நீதிபதிகள், தமிழக அரசின் இயற்கை வளத்துறை செயலாளர் மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை செப்டம்பர் 6ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P