Enter your Email Address to subscribe to our newsletters

உக்ரைன், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
உக்ரைன் போரின் போக்கில் மற்றொரு தீவிர திருப்பமாக, உக்ரைனின் மிக முக்கியமான டான்யூப் நதி துறைமுகமான இஸ்மாயில் மீது ரஷ்யப் படைகள் நேற்று இரவு பயங்கர ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளன.
தெற்கு ஒடேசா பிராந்தியத்தில், ருமேனிய எல்லையிலிருந்து சில நூறு மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த துறைமுகத்தை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக ஒடேசா பிராந்திய ஆளுநர் ஒலே கிப்பர் தனது டெலிகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு 1.30 மணியளவில் வான் பாதுகாப்பு சைரன்கள் ஒலிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த தாக்குதலில் துறைமுகத்தின் உள்கட்டமைப்பு பெரும் சேதமடைந்ததோடு, தானிய கிடங்குகள் மற்றும் நிர்வாக கட்டிடங்களில் தீப்பிடித்து எரிந்ததாக உக்ரைன் தரப்பு தெரிவிக்கிறது. தீயணைப்பு படையினர் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். உயிரிழப்புகள் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை என்றாலும், பொருட்சேதம் மிக அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இஸ்மாயில் சாதாரண துறைமுகம் அல்ல. கருங்கடல் துறைமுகங்கள் மீது ரஷ்யா முற்றுகை விதித்த பிறகு, உக்ரைனின் தானிய ஏற்றுமதிக்கான ஒரே நம்பகமான உயிர்நாடியாக மாறியது இந்த டான்யூப் துறைமுகம் தான். உலகின் பல நாடுகளுக்கு உணவளிக்கும் உக்ரைன் தானியங்கள், சமையல் எண்ணெய் மற்றும் பிற சரக்குகள் இங்கிருந்துதான் ருமேனியா வழியாக ஐரோப்பாவிற்கு கொண்டு செல்லப்படுகின்றன.
மேலும் இது நேட்டோ உறுப்பினரான ருமேனியாவுக்கு எதிர்க்கரையில் அமைந்திருப்பதால், இந்த தாக்குதல் புவிசார் அரசியல் ரீதியாக மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
கடந்த சில மாதங்களாகவே ரஷ்யா தனது தாக்குதல் போக்கை மாற்றி, உக்ரைனின் பொருளாதார கட்டமைப்பை சிதைக்கும் நோக்கில் துறைமுகங்கள், எரிபொருள் கிடங்குகள் மற்றும் தானிய சேமிப்பு நிலையங்களை குறிவைத்து வருகிறது.
இந்த தாக்குதலும் அந்த வியூகத்தின் ஒரு பகுதியே என்று கீவ் குற்றம் சாட்டியுள்ளது. இது உலகளாவிய உணவு விநியோகச் சங்கிலியிலும், தானிய விலையிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Hindusthan Samachar / vidya.b