சீர்காழி அருகே சவுடு மணல் குவாரியை தடுத்து நிறுத்தக் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
மயிலாடுதுறை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட வழுதலைக்குடி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் சவுடு மணல் குவாரி அமைத்து மண் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகு
போராட்டம்


மயிலாடுதுறை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

மயிலாடுதுறை மாவட்டம்

சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் ஊராட்சிக்குட்பட்ட வழுதலைக்குடி கிராமத்தில் குடியிருப்பு பகுதிக்கு அருகாமையில் சவுடு மணல் குவாரி அமைத்து மண் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும், குவாரியில் மண் எடுக்கப்பட்டு வருவதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதாகவும், குடிநீரின் தன்மை மாறி மஞ்சள் நிறத்தில் வருவதாகவும், நீர் உப்பு தன்மையாக மாறியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு அனுமதித்த அளவைவிட அதிக ஆழத்தில் சவுடு மண் எடுக்கப்படுவதால் எதிர்காலத்தில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

இதையடுத்து, குவாரிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்து, சவுடு மண் எடுக்கும் பணியை முழுமையாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி திருமுல்லைவாசல், வழுதலைக்குடி, ராதாநல்லூர், வெள்ளக்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் மாணவர்கள் சீர்காழி–திருமுல்லைவாசல் பிரதான சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர் மற்றும் சீர்காழி வட்டாட்சியர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால், குவாரிக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டால் மட்டுமே சாலை மறியலை கைவிடுவோம் என கிராம மக்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

இதனால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியல் நீடிப்பதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam