Enter your Email Address to subscribe to our newsletters

விருதுநகர், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
தவெக அரசின் தொழில் விரோத மற்றும் தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை கண்டித்தும், சிவகாசி பட்டாசுத் தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும் விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தின் முக்கிய தொழில் மையமாகவும், லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரமாகவும் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டாசு உற்பத்தித் தொழில் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஆய்வு என்ற பெயரில் பட்டாசு தொழிலை முடக்கும் வகையில் தவெக அரசு மேற்கொண்டு வரும் தொழில் விரோத நடவடிக்கைகளை கண்டிப்பதாக திமுக தெரிவித்துள்ளது.
இதனை வலியுறுத்தி, திமுக தலைவர் தளபதியார் அவர்களின் அறிவுறுத்தலின்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வரும் 16.08.2026 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், சிவகாசி பேருந்து நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில, மாவட்ட திமுக நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி மற்றும் வட்டக் கழக நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னோடிகள் மற்றும் திமுக தொண்டர்கள் என அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு மாவட்டக் கழகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பட்டாசுத் தொழிலை பாதுகாப்பது, தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P