Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 11-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தினமும் 12,000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த அளவு போதுமானதல்ல எனத் தெரிவித்துள்ள தமிழக அரசு, ஆகஸ்ட் 12 முதல் 31-ஆம் தேதி வரை விகிதாச்சார அடிப்படையில் தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளது.
அதன்படி, பற்றாக்குறை நீரையும் கணக்கில் கொண்டு வினாடிக்கு 21,413 கனஅடி நீர் திறக்க உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு தனது மனுவில் தெரிவித்துள்ளது.
இவ்வாறு உத்தரவிடப்பட்டால், தமிழகத்திற்கு ஏற்கெனவே கிடைக்க வேண்டிய பற்றாக்குறை நீரான 15.278 டி.எம்.சி. மற்றும் விகிதாச்சார அடிப்படையில் தற்போது கிடைக்க வேண்டிய 21.357 டி.எம்.சி. நீர் என மொத்தம் 36.635 டி.எம்.சி. தண்ணீர் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் கிடைப்பதை உறுதி செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரையிலான காலத்திற்குள் கர்நாடகம் வழங்க வேண்டிய பற்றாக்குறை நீரை முழுமையாக திறந்திருந்தால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் 60 டி.எம்.சி. அளவுக்கு உயர்ந்திருக்கும் என்றும் தமிழக அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன் மூலம் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்க முடியும் என்றும், லட்சக்கணக்கான விவசாயிகள் பயிர் சாகுபடிக்காக காத்திருப்பதாகவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
எனவே, தமிழகத்திற்கு விகிதாச்சார அடிப்படையில் கிடைக்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் உடனடியாக திறந்துவிடுவதை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும் என தமிழக அரசு தனது கூடுதல் மனுவில் வலியுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P