நாளை (ஆகஸ்ட் 14) திரைக்கு வரும் - சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் குடும்பம், காதல்,
ப


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

நடிகர் சூர்யா நடிப்பில், இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கியுள்ள ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 14, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் குடும்பம், காதல், உணர்வுகள் மற்றும் வாழ்க்கைத் தேர்வுகளை மையமாகக் கொண்ட திரைப்படமாக உருவாகியுள்ளது.

சூர்யாவுக்கு மாறுபட்ட கதாபாத்திரம்:

படத்தில் சூர்யா சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

விளையாட்டுத் துறையுடன் தொடர்புடைய கதாபாத்திரமாகவும், குறிப்பாக துப்பாக்கிச் சுடுதல் விளையாட்டில் ஆர்வம் கொண்டவராகவும் அவரது கதாபாத்திரம் அமைந்துள்ளதாக டீசர் மற்றும் டிரெய்லர் தொடர்பான தகவல்கள் தெரிவிக்கின்றன.

வழக்கமான ஆக்ஷன் ஹீரோ பாணியைவிட, உறவுகள் மற்றும் உணர்வுகளை முன்னிலைப்படுத்தும் கதைக்களத்தில் சூர்யாவை பார்க்க முடியும் என்பதே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

சூர்யா – மமிதா பைஜு கூட்டணி:

படத்தின் கதாநாயகியாக மமிதா பைஜு நடித்துள்ளார். சூர்யாவுடன் அவர் முதன்முறையாக இணைந்துள்ள இந்தப் படம், அவருடைய தமிழ் திரைப்பயணத்தில் முக்கியமான படமாக பார்க்கப்படுகிறது.

டிரெய்லரில் சூர்யா மற்றும் மமிதா பைஜு இடையேயான உறவு, வயது வித்தியாசம் காரணமாக உருவாகும் தயக்கம் மற்றும் அதனால் ஏற்படும் உணர்ச்சிப் போராட்டங்கள் இடம்பெறுவதாகத் தெரிகிறது.

எனவே இது வெறும் வழக்கமான காதல் கதையாக இல்லாமல், காதல் – குடும்பம் – சமூக பார்வை ஆகியவற்றை இணைக்கும் கதையாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முக்கிய நட்சத்திரங்கள்:

சூர்யா மற்றும் மமிதா பைஜுவுடன் ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை நிமிஷ் ரவி, படத்தொகுப்பை நவீன் நூலி மேற்கொண்டுள்ளனர்.

குறிப்பாக, நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரவீனா டாண்டன் தமிழில் மீண்டும் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றுவது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

‘வாத்தி’ மற்றும் ‘லக்கி பாஸ்கர்’ படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி, இந்தப் படத்தின் மூலம் சூர்யாவுடன் முதன்முறையாக இணைந்துள்ளார்.

முன்னதாக சூர்யாவுக்காக வேறு வகையான கதையை இயக்குநர் முன்வைத்ததாகவும், சூர்யா குடும்பப் பின்னணியுடன் கூடிய எளிமையான படத்தில் நடிக்க விரும்பியதைத் தொடர்ந்து ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ கதை உருவானதாகவும் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ‘லக்கி பாஸ்கர்’ மூலம் கவனம் பெற்ற வெங்கி அட்லூரி, சூர்யாவை வைத்து எந்த மாதிரியான குடும்ப உணர்வுகளை திரையில் கொண்டு வந்திருக்கிறார் என்பதும் படத்தின் முக்கிய எதிர்பார்ப்பாக உள்ளது.

படப்பிடிப்பில் நெகிழ்ச்சியான சம்பவம்:

படக்குழுவினரின் சமீபத்திய பகிர்வுகளில் அதிகமாக பேசப்பட்ட விஷயம் நடிகை ராதிகா சரத்குமாரின் தொழில்முறை அர்ப்பணிப்பு.

படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது அவரது தாயார் கீதா ராதா உயிரிழந்த தகவல் அவருக்கு கிடைத்தது.

அந்த நேரத்திலும் படத்தின் முக்கியமான காட்சியை முடித்துவிட்டு செல்ல வேண்டும் என்று ராதிகா முடிவு செய்ததாக படக்குழுவினர் பகிர்ந்துள்ளனர்.

அப்போது படத்தின் சுமார் 85 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை சூர்யா, மமிதா பைஜு மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்துள்ளனர்.

படத்தின் இசையை ஜி.வி. பிரகாஷ் குமார் அமைத்துள்ளார்.

சூர்யா பிறந்தநாளான ஜூலை 23 அன்று வெளியிடப்பட்ட இரண்டாவது பாடலை சூர்யாவே பாடியிருப்பதாக ஜி.வி. பிரகாஷ் அறிவித்திருந்தார்.

இதனால் பாடல்களும் படத்தின் மீதான எதிர்பார்ப்பில் முக்கிய இடம் பெற்றுள்ளன.

ஆகஸ்ட் 14 (நாளை)வெளியீட்டை முன்னிட்டு முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

குறிப்பாக வெளிநாட்டு சந்தைகளில் படத்திற்கான முன்பதிவு தொடக்கத்திலேயே கவனம் பெற்றுள்ளது.

ஆகஸ்ட் 12 நிலவரப்படி வெளிநாட்டு முன்பதிவு வசூல் USD 36,000-ஐ கடந்ததாக கூறப்படுகிறது .

அதே நேரத்தில், சூர்யாவின் முந்தைய வெற்றி படத்தின் தாக்கத்தால் இப்படத்தின் வணிக எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளதாக தொழில்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகஸ்ட் 14 அன்று சூர்யாவின் ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மட்டுமல்லாமல் விஷால் நடிக்கும் ‘மகுடம்’ திரைப்படமும் வெளியாகிறது.

முதலில் அதே நாளில் வெளியாக இருந்த கவின்–நயன்தாரா நடித்த ‘Hi’, தற்போது ஆகஸ்ட் 28ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இதனால் ஆகஸ்ட் 14 போட்டியில் முக்கியமாக சூர்யா மற்றும் விஷால் படங்களுக்கு இடையே கவனம் திரும்பியுள்ளது.

ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்ன?

‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ மீது எதிர்பார்ப்பு ஏற்படுவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

முதலாவது – சூர்யாவின் கதாபாத்திர தேர்வானது,

வழக்கமான மாஸ் ஆக்ஷன் படங்களிலிருந்து விலகி, உறவுகளையும் உணர்வுகளையும் மையமாகக் கொண்ட கதையில் அவர் நடிப்பது.

இரண்டாவது – வெங்கி அட்லூரி.

‘லக்கி பாஸ்கர்’ வெற்றிக்குப் பிறகு அவர் இயக்கும் படம் என்பதால், கதையை அவர் எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்ற ஆர்வம்.

மூன்றாவது – சூர்யா மற்றும் மமிதா பைஜுவின் திரை இணைப்பு.

வித்தியாசமான வயது மற்றும் வாழ்க்கைப் பின்னணியைக் கொண்ட இரு கதாபாத்திரங்களுக்கு இடையேயான உறவு படத்தின் முக்கிய உணர்ச்சிப் பகுதியாக இருக்கக்கூடும்.

படம் எப்படி இருக்கும்?

டிரெய்லர் அடிப்படையில் பார்க்கும்போது, முழுக்க மாஸ் ஆக்ஷன் படமாக இல்லாமல், காதல் + குடும்பம் + உணர்ச்சி + நகைச்சுவை கலந்த ஒரு சீல் குட் டிராமா

என்ற எதிர்பார்ப்பை படம் ஏற்படுத்துகிறது.

ஆனால் கதை, திரைக்கதை, சூர்யா–மமிதா பைஜு உறவு எவ்வாறு கையாளப்பட்டுள்ளது, இரண்டாம் பாதியின் வலிமை, உணர்ச்சிக் காட்சிகளின் தாக்கம் போன்றவற்றை படம் முழுமையாக வெளியான பிறகே தெரியும்.

மொத்தத்தில்,

சூர்யாவின் நட்சத்திர அந்தஸ்தை மட்டும் நம்பாமல், குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒரே நேரத்தில் கவரும் உணர்வுப்பூர்வமான கதையை வெங்கி அட்லூரி கொடுத்திருக்கிறாரா என்பதே நாளைய வெளியீட்டில் மிகப்பெரிய கேள்வியாக இருக்கிறது.

ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் இப்படம், சூர்யாவின் முந்தைய படங்களிலிருந்து மாறுபட்ட அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்குமா என்பது திரையரங்கில் படம் பார்த்த பிறகே தெளிவாகும்.

Hindusthan Samachar / Durai.J