Enter your Email Address to subscribe to our newsletters

ஐதராபாத் , 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
தெலுங்கானாவில் கோதாவரி நதிநீரை முழுமையாக பயன்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக எல்லம்பள்ளி, தேவாதுலா, சீதாராமா ஆகிய திட்டங்கள் மூலம் நீரை எடுத்து பயன்படுத்தும் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நீர்ப்பாசனத் துறை தொடர்பாக முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் கோதாவரி நீரை பயன்படுத்துவது, காளேஸ்வரம் திட்டத்தின் நிலை, நீர்ப்பாசனத் திட்டங்களின் முன்னேற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
காளேஸ்வரம் அணைகள்
காளேஸ்வரம் திட்டத்தின் மேடிகட்டா, அன்னாரம், சுந்தில்லா அணைகளில் தற்போது நீர் தேக்கி வைக்கப்படவில்லை. தேசிய அணை பாதுகாப்பு ஆணையத்தின் (என்.டி.எஸ்.ஏ.) பரிந்துரைகள் மற்றும் வழிகாட்டுதல்களை அதிகாரிகள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தினார்.
மேடிகட்டா மற்றும் சுந்தில்லா அணைகளில் சில குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி தெரிவித்தார்.
இதுதொடர்பாக உடனடியாக என்.டி.எஸ்.ஏ.வை தொடர்புகொண்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-மந்திரி உத்தரவிட்டார்.
9 பம்புகள் மூலம் நீரேற்றம்
தேவாதுலா திட்டத்தில் உள்ள 9 பம்புகள் மூலம் நீரை எடுத்து பயன்படுத்துவது முக்கியம் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார். அங்கு ஏற்படும் சிறிய தொழில்நுட்ப பிரச்சினைகளையும் உடனடியாக சரிசெய்து நீரேற்றப் பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
விவசாயிகளுக்கு இழப்பீடு
பல்வேறு நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் முதல்-மந்திரி அறிவுறுத்தினார்.
நீரில் மூழ்கக்கூடிய கிராமங்கள், நிலுவையில் உள்ள இழப்பீடுகள் மற்றும் மறுவாழ்வு தொகுப்புகள் குறித்து வருவாய் மற்றும் நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவாக இழப்பீடு வழங்கினால்தான் பஸ்வாபூர் மற்றும் கவுரவெல்லி திட்டங்களில் நீரை நிரப்ப முடியும் என்று ரேவந்த் ரெட்டி தெரிவித்தார்.
திட்டங்களின் திறனை அதிகரிக்க ஆய்வு
கட்டு மற்றும் குடேந்தொட்டி நீரேற்றுத் திட்டங்களின் திறனை அதிகரிப்பது குறித்து உரிய ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், குடேந்தொட்டி பம்ப்டு ஸ்டோரேஜ் திட்டத்துக்கு ஆலோசகரை நியமிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி உத்தரவிட்டார்.
கோதாவரி நீரை அதிகபட்சமாக பயன்படுத்துவதுடன், காளேஸ்வரம் அணைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், நிலம் இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவுபடுத்துதல் ஆகியவற்றில் அரசு தீவிர கவனம் செலுத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கூட்டத்தில் நீர்ப்பாசனத்துறை மற்றும் வருவாய்த்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA