ராயதுர்கா நில ஏலத்தை நிறுத்த வேண்டும் - முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு பி.ஆர்.எஸ் கட்சித் தலைவர் ஹரீஷ் ராவ் கடிதம்
ஐதராபாத், 13 ஆகஸ்ட் (ஹி.ச.) ஐதராபாத் ராயதுர்கா பகுதியில் உள்ள 10.63 ஏக்கர் நிலத்தை ஏலம் விடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரீஷ
A


ஐதராபாத், 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

ஐதராபாத் ராயதுர்கா பகுதியில் உள்ள 10.63 ஏக்கர் நிலத்தை ஏலம் விடும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று தெலுங்கானா முதல்-அமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு பி.ஆர்.எஸ். கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ஹரீஷ் ராவ் கடிதம் எழுதியுள்ளார்.

ஐதராபாத் ஐ.டி. காரிடாரில் அமைந்துள்ள ராயதுர்கா பான் மக்தா கிராமத்தின் சர்வே எண் 83-ல் இந்த நிலம் இருப்பதாகவும், அது பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த நிலத்தின் உரிமை தொடர்பாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.) மற்றும் வக்ஃப் வாரியம் இடையே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நிலத்தின் உரிமை தொடர்பான பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாத நிலையில், அந்த நிலத்தை ஏலம் விடுவதன் மூலம் மூன்றாம் தரப்பினருக்கு உரிமை ஏற்படும் நிலை உருவாகும் என்றும், எனவே ஏலத்தை நிறுத்த வேண்டும் என்றும் ஹரீஷ் ராவ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ரேவந்த் ரெட்டியையும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே நிலங்களை பாதுகாப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ரேவந்த் ரெட்டி நீதிமன்றத்தை நாடியதாகவும், தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் நிலையில், அதே சர்ச்சைக்குரிய நிலத்தை ஏலம் விடுவது எப்படி? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதே சர்வே எண்ணில் ஏற்கனவே 6.2 ஏக்கர் நிலம் ஒரு ஏக்கருக்கு ரூ.237 கோடி என்ற அளவில் ஏலம் விடப்பட்டதாகவும், அந்த நிலத்தின் உரிமையை எஸ்.பி.ஐ. கோரியுள்ளதால், இந்த விவகாரம் தெலுங்கானா ஐகோர்ட்டில் விசாரணையில் இருப்பதாகவும் ஹரீஷ் ராவ் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு முடிவடையாத நிலையில், அதே சர்வே எண்ணில் மேலும் 10.63 ஏக்கர் நிலத்தை ஏலம் விடுவது அரசின் நிர்வாக முடிவு குறித்து கேள்வியை எழுப்புவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

நிலத்தின் உரிமை தொடர்பான அனைத்து வழக்குகளும் முடியும் வரை ஏலம், நிலப்பரிமாற்றம், பத்திரப்பதிவு அல்லது எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது என்று ஹரீஷ் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், பாரம்பரிய நிலம் தொடர்பான ஆவணங்கள் காணாமல் போனது குறித்தும், வக்ஃப் ஆவணங்கள் தொடர்பான முறைகேடுகள் குறித்தும் சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

வருங்கால தலைமுறைக்காக தெலுங்கானாவின் மதிப்புமிக்க பாரம்பரிய மற்றும் பொது சொத்துகளை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என்றும் ஹரீஷ் ராவ் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA