Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)
தூத்துக்குடி அருகே உள்ள வெள்ளப்பட்டி மீனவ கிராமத்தின் மையப்பகுதியில் நல்ல ஆலோசனை மாதா ஆலயம் அமைந்துள்ளது. இங்கு தற்போது புதிய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பணியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட கட்டுமானத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர்.
இன்று ஆலயத்தின் மேற்கூரை அமைக்கும் பணி நடைபெற்றுள்ளது. ஹைட்ராலிக் ஜாக்கி உதவியுடன் மேற்கூரையை மேலே உயர்த்தி கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்துள்ளது.
இதில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர்.
தொழிலாளர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த பொதுமக்கள் உடனடியாக மீட்புப் பணியில் ஈடுபட்டதுடன், தீயணைப்புத் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து தூத்துக்குடியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகுல் உசேன், கும்பகோணத்தைச் சேர்ந்த விஜய் மற்றும் முரளிதரன், தூத்துக்குடி தாளமுத்துநகரைச் சேர்ந்த சந்திரசேகர், தென்காசி மாவட்டம் கடையத்தைச் சேர்ந்த சேகர், கோவில்பட்டியைச் சேர்ந்த மூர்த்தி, குறுக்குச்சாலையைச் சேர்ந்த சுபாஷ், செட்டியூரணியைச் சேர்ந்த ராமர், தூத்துக்குடி அமுதாநகரைச் சேர்ந்த மணிகண்டன் உள்ளிட்ட 10 பேர் மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் உடனடியாக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு அவர்களுக்கு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இடிபாடுகளில் சிக்கி லேசான காயமடைந்த 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, மேற்கூரை இடிந்து விழுந்ததற்கான காரணம் மற்றும் கட்டுமானப் பணியில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட்டனவா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P