Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச)
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை விரிவான ஆய்வுக்காக கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்ப மத்திய அரசு எடுத்துள்ள முடிவை வரவேற்பதாகவும், அதேவேளையில் மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்பதே தங்களது முதன்மையான கோரிக்கை என்றும் சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் அறிக்கை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டத் திருத்த மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசு இதுவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், மசோதாவை கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பியிருப்பது நேர்மறையான மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கை என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் மசோதாவை நாடாளுமன்றத்தில் விரிவாக ஆய்வு செய்வதற்கும், அனைத்து தரப்பினரிடமும் ஆலோசனை நடத்துவதற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும், நாடு முழுவதும் உள்ள தேவாலயங்கள், தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், சட்ட வல்லுநர்கள், சமூக அமைப்புகள் மற்றும் சிறுபான்மை பிரதிநிதிகள் எழுப்பியுள்ள கவலைகளை முழுமையாகப் பரிசீலிக்க இது வாய்ப்பளிக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
முன்மொழியப்பட்டுள்ள சட்டத் திருத்தங்கள் தொண்டு, கல்வி, சுகாதாரம், மனிதநேய சேவை, சமூக சேவை மற்றும் மதப் பணிகளில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதால், ஆரம்பம் முதலே மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி வருவதாக பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த பல மாதங்களாக தங்களது அமைப்பு அமைதியான, ஜனநாயக மற்றும் அரசியலமைப்புச் சட்டத்திற்கு உட்பட்ட முறையில் தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், மசோதாவை உடனடியாகத் திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு கடிதம் எழுதியதையும் பி.வில்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஏப்ரல் 16ஆம் தேதி டெல்லி அரசியலமைப்பு கிளப்பில் தேசிய ஆலோசனைக் கூட்டம், தொடர்ந்து நாடு தழுவிய இணையவழி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டதாகவும், இதில் நாடு முழுவதிலும் இருந்து 150-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சட்ட வல்லுநர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூன் 17ஆம் தேதி நடைபெற்ற தேசியத் தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பங்கேற்றதாகவும், ஜூன் 28ஆம் தேதி நாடு முழுவதும் தேவாலயங்கள், கிறிஸ்தவ குடும்பங்கள் மற்றும் மிஷன் அமைப்புகள் சார்பில் தேசிய பிரார்த்தனை மற்றும் உண்ணாநோன்பு கடைபிடிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஜூலை 3ஆம் தேதி நாடு தழுவிய தேசிய எதிர்ப்பு தினம் நடத்தப்பட்டதாகவும், பல்வேறு பகுதிகளில் அமைதியான போராட்டங்கள், கையெழுத்து இயக்கங்கள் மற்றும் மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜூலை 20ஆம் தேதி புதுடெல்லியில் உள்ள இந்தியா சர்வதேச மையத்தில் நடைபெற்ற தேசிய ஆலோசனைக் கூட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், திருச்சபைத் தலைவர்கள், சுகாதாரத் துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் தலைவர்கள் பங்கேற்றதாகவும் பி.வில்சன் கூறியுள்ளார்.
கடந்த ஆகஸ்ட் 6ஆம் தேதி தனது தலைமையிலான குழு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து, சட்டத் திருத்தத்தால் கிறிஸ்தவ சமூகத்தினருக்கும் நிறுவனங்களுக்கும் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் கவலைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து கிறிஸ்தவ சமூகத் தலைவர்களுடன் இணைந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினையும் சந்தித்ததாகவும், சிறுபான்மையினருக்கும் கிறிஸ்தவ சமூகத்தினருக்கும் தொடர்ந்து ஆதரவாக குரல் கொடுத்து வருவதற்காக அவருக்கு நன்றி தெரிவித்ததாகவும் பி.வில்சன் கூறியுள்ளார்.
மசோதாவை முழுமையாகத் திரும்பப் பெற வேண்டும் என்ற தங்களது பிரதான கோரிக்கையில் சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கை மன்றம் உறுதியாக உள்ளது என்றும், அதேவேளையில் மசோதா கூட்டு நாடாளுமன்றக் குழுவுக்கு அனுப்பப்பட்டிருப்பதை நேர்மறையான நடவடிக்கையாகக் கருதுவதாகவும் பி.வில்சன் தெரிவித்துள்ளார்.
இந்தப் போராட்டத்தில் தங்களுடன் துணைநின்ற அனைத்து தலைவர்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுக்கும் அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ