முதல்வர் விஜயுடன் மான்டேக் சிங் குழு இன்று முக்கிய ஆலோசனை
சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.) தமிழகத்தின் வரி மற்றும் வரி சாரா வருவாயை அதிகரிப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்கும் பொருட்டு, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, முதலமைச்சர் விஜயை இன்று
hold key consultation with Montek Singh's team


சென்னை, 13 ஆகஸ்ட் (ஹி.ச.)

தமிழகத்தின் வரி மற்றும் வரி சாரா வருவாயை அதிகரிப்பதற்கான செயல் திட்டத்தை வகுக்கும் பொருட்டு, முன்னாள் திட்டக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா தலைமையில் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு, முதலமைச்சர் விஜயை இன்று பிற்பகல் சந்தித்து ஆலோசனை நடத்துகிறது.

மாநிலத்தின் நிதி நிலையை வலுப்படுத்தவும், வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி ஆதாரங்களை பெருக்கவும், வரி வருவாய் மற்றும் வரி அல்லாத வருவாய் இனங்களை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து அரசுக்கு பரிந்துரைகளை வழங்குவதற்காக இந்த சிறப்புக் குழு அண்மையில் அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவின் தலைவராக பொருளாதார நிபுணர் மான்டேக் சிங் அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் நடைபெறவுள்ள இந்த சந்திப்பில், தமிழகத்தின் தற்போதைய வருவாய் நிலவரம், ஜிஎஸ்டி வசூல், மதுபான விற்பனை, பத்திரப்பதிவு, சுரங்கங்கள் மற்றும் கனிம வளங்கள் மூலமான வருமானம் உள்ளிட்ட வரி அல்லாத வருவாய் இனங்களை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் குழுவின் ஆரம்பக்கட்ட அறிக்கையை முதல்வரிடம் சமர்ப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / vidya.b