Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச)
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நீட், ஜே.இ.இ., கியூட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்கச் சென்ற மாணவிகள் சிலர், வகுப்பறையில் அமர்ந்து மது அருந்தும் காணொலி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பாடங்கள் கற்பிக்கப்பட வேண்டிய வகுப்பறைகள் மதுக்கூடங்களாக மாறி வருவது மிகவும் கவலைக்குரியது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், அரசு பள்ளிகளில் மாணவர்கள், மாணவிகள் மது அருந்தும் சம்பவங்கள் புதிதல்ல என்றும், கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிவரும்போது இளைய சமுதாயம் எங்கே செல்கிறது என்ற கவலையும், எதிர்காலத் தூண்களாக வளர்க்கப்பட வேண்டிய குழந்தைகளை அரசும் சமூகமும் சீரழிக்கின்றனவே என்ற ஆத்திரமும் ஏற்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவங்களை முற்றிலுமாகத் தடுப்பது ஆட்சியாளர்களின் கடமை என்றும், அரசு பள்ளியில் மாணவிகள் மது அருந்தியதைத் தடுக்கத் தவறியதற்காக பள்ளியின் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், மாணவர்களுக்கு மது எளிதாகக் கிடைக்கும் சூழலை உருவாக்கியவர்களுக்கும் உரிய பொறுப்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பள்ளிகள் மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு அருகில் மதுக்கடைகள் செயல்படுவதாகவும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் வழியில் மதுக்கடைகளை கடந்து செல்ல வேண்டிய நிலை இன்னும் தொடர்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், வரிசையில் நிற்காமல் ஆன்லைனில் முன்பதிவு செய்து எளிதாக மது வாங்குவதற்கான வசதிகளை ஏற்படுத்துவது சீர்திருத்தமா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மனிதர்களை சீரழிக்கும் மதுவை ஒழிப்பதே அரசின் கடமையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மக்களுக்கும், குறிப்பாக மாணவர்களுக்கும் மது எளிதாகக் கிடைப்பதை உடனடியாகத் தடுக்க வேண்டும். குறைந்தது ஆண்டுக்கு 1,000 மதுக்கடைகளை மூடி, அடுத்த மூன்று ஆண்டுகளில் தமிழ்நாட்டில் முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்த முதலமைச்சர் விஜய் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ