அமராவதி சாலை பணிக்கு ரூ.1,519 கோடியா? - முன்னாள் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு கண்டனம்
குண்டூர் , 14 ஆகஸ்ட் (ஹி.ச.) அமராவதி தலைநகர் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் என்ற பெயரில் கூட்டணி அரசு மக்களின் பணத்தை பெருமளவில் தவறாக பயன்படுத்தி வருவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு குற்றம்சாட்டின
A


குண்டூர் , 14 ஆகஸ்ட் (ஹி.ச.)

அமராவதி தலைநகர் கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு பணிகள் என்ற பெயரில் கூட்டணி அரசு மக்களின் பணத்தை பெருமளவில் தவறாக பயன்படுத்தி வருவதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் அம்பட்டி ராம்பாபு குற்றம்சாட்டினார்.

குண்டூரில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது:-

அமராவதி ஒரு அற்புதமான நகரமாக உருவாகவில்லை. மாறாக, ஊழல் மற்றும் முறைகேடுகளுக்கு மையமாக மாறி வருகிறது. தலைநகர் கட்டுமானப் பணிகள் எப்போது நிறைவடையும் என்பது தெளிவாக இல்லை.

தற்காலிக கட்டிடங்கள், ஸ்டீல் பாலங்கள் உள்ளிட்ட பணிகளுக்காக ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவிடப்படுகிறது. இதற்காக கடன் வாங்கி மக்களின் பணத்தை வீணடிப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

குறிப்பாக சாலை அமைக்கும் பணிகளில் அதிக அளவில் முறைகேடுகள் நடைபெறுவதாக சந்தேகம் எழுப்பிய அவர், 22 கிலோமீட்டர் சாலைக்கு ரூ.1,519 கோடி செலவு காட்டப்படுவதாக தெரிவித்தார். ஒரு கிலோமீட்டர் சாலைக்கு இவ்வளவு அதிகமான தொகை செலவிடப்படுவது இதுவரை இல்லாத வகையில் இருப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

மேலும், அமராவதி தலைநகருக்காக நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்றும் அம்பட்டி ராம்பாபு கூறினார். அதேநேரத்தில், கட்டுமானத் திட்டங்களுக்கான மதிப்பீட்டுத் தொகை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதாகவும், கமிஷன் பெறுவதற்காகவே திட்டச் செலவுகள் அதிகரிக்கப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.

அமராவதி பெயரில் மக்களின் வரிப்பணம் முறையாக பயன்படுத்தப்படுகிறதா என்பதை அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்றும், திட்டங்களின் செலவு மற்றும் பணிகள் குறித்து முழுமையான விவரங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் அம்பட்டி ராம்பாபு வலியுறுத்தினார்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA