Enter your Email Address to subscribe to our newsletters

அமராவதி , 14 ஆகஸ்ட் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேசத்தில் முக்கிய பாசனத் திட்டங்களின் பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாக முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையில் அமராவதியில் உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் போலவரம், வெலிகொண்டா உள்ளிட்ட முன்னுரிமை திட்டங்களின் பணிகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
கூட்டத்தில் போலவரம் திட்டத்தின் தற்போதைய நிலவரம் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். திட்டத்தின் 89.9 சதவீத சிவில் பணிகள் நிறைவடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இடது கால்வாய் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருவதாகவும், ஈ.சி.ஆர்.எப். அணையின் கேப்–1 மற்றும் கேப்–2 பகுதிகளின் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினர்.
போலவரம் பகுதியில் சமீபத்தில் வினாடிக்கு 14 லட்சம் கனஅடி அளவுக்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டபோதிலும், திட்டப் பணிகளுக்கு எந்தவித இடையூறும் ஏற்படாமல் தொடர்ந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து, பணிகளின் முன்னேற்றத்தில் திருப்தி தெரிவித்த சந்திரபாபு நாயுடு, அணைப்பகுதியில் சாலைகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளின் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும், போலவரம் அருகே உள்ள கண்டி போஷம்மா கோவிலை பாதுகாக்கும் வகையிலும், உள்ளூர் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையிலும் திட்டப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
மேலும், மாநிலத்தில் உள்ள 36 முக்கிய பாசனத் திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் தேர்வு செய்து, அவற்றின் பணிகளை விரைவுபடுத்தி நிறைவு செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மாநிலத்தின் நீர்த்தேக்கங்களில் உள்ள நீர் இருப்பு, மழைப்பொழிவு நிலவரம், நிலத்தடி நீர்மட்டம், குடிநீர் வினியோகம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் முதல்-மந்திரி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
‘ஜலதாரா–ஜலஹாரதி’ திட்டங்களின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்த அவர், மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் பாசன நீர் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் நீர்வளத்துறை அமைச்சர் நிம்மல ராமநாயுடு, சிறப்பு தலைமைச் செயலாளர் சசிபூஷண் குமார் மற்றும் நீர்வளத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA