Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 14 ஆகஸ்ட் (ஹி.ச)
முதலீட்டாளர்கள் மாநாடு தொடர்பாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு, முதலமைச்சர் விஜயை விமர்சித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், 2021ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்றபோது தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 0.07 சதவீதமாக இருந்ததாகவும், கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் உலக பொருளாதார வளர்ச்சி 3 சதவீதமாகவும், இந்தியாவின் வளர்ச்சி 7 சதவீதமாகவும் இருந்த நிலையில், தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.3 சதவீதமாக உயர்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை வளர்ச்சி 14 சதவீதமாக உயர்ந்ததுடன், இந்தியாவின் மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் பங்கு 44 சதவீதமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர்கள் மூலம் ஆண்டுக்கு மூன்று முறை வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, பல லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கியவர் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் அப்பாவு குறிப்பிட்டுள்ளார்.
நேற்று நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும், ஏற்கனவே முந்தைய ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதலீடுகளுக்கு தற்போது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு, அவற்றை தற்போதைய ஆட்சியில் உருவாக்கப்பட்ட திட்டங்கள் போல் காட்சிப்படுத்துவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், “ஒரு லட்சம் ரூபாய் முதலீடு வைத்துள்ள ஒரு சாமானியர், ரூ.10,000 கோடி தொழில் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருப்பது வேடிக்கையாக உள்ளது” என்றும் அப்பாவு விமர்சித்துள்ளார்.
தொழில் வளர்ச்சிக்கு அடிப்படையான பரந்தூர் மற்றும் ஓசூர் புதிய விமான நிலையப் பணிகளை முடக்கிவிட்டு, ஆந்திரா மற்றும் கர்நாடகாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
“டப்பிங் முதல்வரே, உங்கள் செயல் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் இல்லையா?” என முதலமைச்சர் விஜயை முன்னாள் சபாநாயகர் அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ